சிறுவயதில் என் பாட்டியுடன் களித்த இனிமையான நினைவுகள்!
- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
என் பாட்டி 116 வயது வரை எங்களுடன் இருந்தார்கள். அவர் என் அம்மாவிற்கு அம்மாச்சி, எங்க அப்பாவிற்கு அப்பாயி. அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது நானும் எங்கள் பாட்டியும் எங்கள் வீட்டு கொடுக்காப்புளி மரத்தில் உள்ள கொடுக்காப்புளிகளை நான் மரத்தில் ஏறி பறித்துக் கொடுப்பேன். அதை என் பாட்டி பள்ளிக்குச் சென்று அதை கூறு கட்டி விற்று அதில் தேவையான பணத்தை அவர் எடுத்துவிட்டு மீதியை என்னிடம் கொடுத்து விடுவார். அதை நாங்கள் எங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி சாப்பிடுவோம்; சேமித்து வைப்போம்.
எங்கள் பாட்டிக்கு எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க பிடிக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு விடுவார்கள். அப்படி சாப்பாடு கொடுக்க நேரம் ஆனால் ஏதாவது ஒரு பொருளை டம்மு டம்முன்னு கீழ போடுவாங்க. இல்லன்னா பெருக்குமாறு எடுத்து வாசலைப் பெருக்குவாங்க. அதிலிருந்து தெரிஞ்சுக்குவோம் பாட்டிக்கு சாப்பாடு கொடுக்க நேரம் ஆயிடுச்சு அப்படின்னு.
இல்ல நாங்க ஏதாவது வேலையில் இருந்தாலோ, தூங்கிட்டோலோ மறந்துட்டோலோ அப்படின்னா வந்து என்கிட்ட "ஏம்மா சாப்பாடு ஏதும் நான் வைக்கட்டுமா?" அப்படின்னு கேட்பாங்க. அப்ப அதிலிருந்து நாங்க புரிஞ்சுக்குவோம் சாப்பாடு உடனே வைக்கணும். அதனால எங்க அம்மா கூட சொல்லுவாங்க "எங்க அப்பாவுக்கு கூட பயப்பட தேவையில்ல, ஆனா எங்க அம்மாயிக்கு நான் பயப்படணும்" அப்படின்னு சொல்லுவாங்க. அது இன்னைக்கு நினைச்சாலும் அவங்க கூட இருந்த அனுபவம் ஒரு மிகப்பெரிய பொக்கிஷமா இருந்தது.
பாட்டிக்கு விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் மற்ற எல்லா வேலைகளுமே தெரியும். அந்த வேலைகளை எல்லாம் எங்க அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்தவர் எங்க பாட்டி தான். அப்புறமா எங்க வீட்ல இருந்ததுனால எங்களுக்கு சொல்லிக் கொடுப்பாங்க. 116 வயது வரைக்குமே அவங்க கண் ஆபரேஷன் பண்ணாம யாரு எங்க போனாலும் அவங்களோட பேர் சொல்லி இல்லன்னா அவங்க குடும்பத்துக்கு பேரை சொல்லி கூப்பிடுவாங்க. பல்லு கூட அதிகம் விழாமல் அவங்க நினைச்ச பொருளை வாங்கி சாப்பிட்டுக்கிட்டு மிகவும் மகிழ்ச்சியா இருந்தாங்க.
எங்களுக்கு பாட்டி நிறைய கதைகள் சொல்லுவாங்க. அவங்க வாழ்க்கையில எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாங்க. எங்க அம்மா எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாங்க அப்படிங்கிறதெல்லாம் எங்களுக்கு சொல்லுவாங்க. அவங்க மூலமா எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு உயர்ந்த நிலையை அடைந்து இருக்காங்க அப்படிங்கறது எங்களுக்கு புரிய வச்சாங்க.. எங்க உறவினர்கள் எல்லாருமே எங்க பாட்டிக்கு பயப்படுவாங்க. எங்கள் ஊரில் அதிக வாழ்நாட்கள் உயிர் வாழ்ந்தது எங்கள் பாட்டியும் ஒருவர் என்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரின் நினைவலைகள் அவ்வப்போது எனக்கு வந்து போகும். அது ஒரு பொற்காலம்.
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராக, சிறுகதை, கவிதை, கட்டுரை, வகுப்பறை அனுபவம், நடிப்புத்திறன், பாடல் பாடுதல் போன்ற பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார்.).