ஜமுனா எனக்குப் பயமா இருக்கு அழாதே அனாமிகா பயணம் 3
- ந. தீபலட்சுமி
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் மாலா. அவளையே பார்த்தபடி இடுப்பில் கைகளை வைத்து முறைத்தபடி நின்றிருந்தாள் ஜமுனா.
"என்னடி இது, சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு? எனக்கு அண்ணன் போன் பண்ணியதும் கையும் ஓடல, காலும் ஓடல, உடனே வந்துட்டேன், என்ன பிரச்சனை?" என கேட்ட ஜமுனாவை, மாலா, அப்படியே கட்டிக் கொண்டாள்.
"ஜமுனா, எனக்கு பயமா இருக்கு இவர் இன்றைக்கு நடந்துகிட்ட முறை எனக்கு கொஞ்சமும் பிடிக்கல."
"அட பைத்தியம் இதுக்கெல்லாமா அழறது? அண்ணனோட இத்தனை வருடம் ஒன்றாக பழகிட்டு அவரைப் பற்றி தப்பா நினைக்கலாமா?"
"அதுக்கில்லை...வந்து... இன்றைக்கு அனுவுக்கு டிரஸ் எடுக்க போனோமா...." என அவள் சொல்லி முடிக்கும் முன்னே உள்ளே நுழைந்தான் ரஞ்சித்.
"என்னம்மா ஜமுனா உங்க பிரண்டு என்ன சொல்றாங்க?" என சிரித்துக் கொண்டே கேட்டான்.
"ஏண்ணா அவளை பயமுறுத்துனீங்க ? எப்படி பயந்திருக்கா பாருங்க. வெளியில் போனால் கொஞ்சம் பவ்யமா நடந்து கொள்ளக் கூடாதா?" என கேட்ட ஜமுனாவை ஒரு சின்ன புன்னகையுடன் பார்த்து தலையசைத்தான் ரஞ்சித்.
" ஒகே, ஓகே.. சாரி மை டியர் ஒய்ஃப். இனி அப்படி அதிகாரத்தோட நடந்துக்க மாட்டேன் போதுமா?" என கேட்டுக்கொண்டே அவள் அருகில் அமர்ந்து தலையை மெதுவாகக் கோதிவிட்டான்.
"மாலாம்மா... நான் அங்கு வருவதற்கு முன்னால் அந்த சேல்ஸ்மேன் உன்னை எப்படி நடத்தினான் என நான் பார்த்துக்கொண்டே தான் இருந்தேன். அதனால்தான் நாம் அந்த கடையின் முதலாளியையே வேலை வாங்குவோம் என காட்டுவதற்காகத்தான் அப்படி பேசினேன், மற்றபடி இதில் பயப்பட ஏதும் இல்லையே..." என அவளை சமாதானம் செய்தான் ரஞ்சித்.
"அப்படியா? அப்போ எதுக்காக அவனை அந்த ரூம்ல வச்சு அடிச்சு உதைச்சீங்க? அவனால எந்திரிக்க முடியாமல் மயங்கி விழுந்தானே..." எனக் கூறியவளை ரஞ்சித் இப்பொழுது ஆச்சரியமாக பார்த்தான்.
"ஓ... அதான் மாலாம்மாவிற்கு வருத்தமா? உன்னை அவன் நடத்திய விதத்திற்கு ஒரு சின்ன கிப்ட் கொடுத்தேன் அவ்வளவுதான்".
மாலா அந்த நிகழ்வை தன் நினைவில் கொண்டு வந்தாள். ஒரு விதத்தில் ரஞ்சித் சொல்வது சரி எனவேபட்டது அவளுக்கு.
"சரி விடுடி, அதான் அண்ணன் அவ்வளவு தூரம் சொல்றாறில்லை", என ஜமுனா ஒரு பக்கம் அவனுக்குப் பரிந்து பேச, மாலா கண்களைத் துடைத்துக் கொண்டு அவன் தோளின் மீது சாய்ந்தாள்.
"இனிமேல் நீங்க இப்படி எல்லாம் நடந்துக்கக் கூடாது பிராமிஸ் பண்ணுங்க" என்றாள் மாலா.
" பிராமிஸ்..... பிராமிஸ்......, போதுமா? வேண்டுமென்றால் தோப்புக்கரணம் போடவா?" என கேட்டபடி தன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு அவன் கேட்க, அவசர அவசரமாக இவள் தடுக்க, அதை அருகில் நின்றிருந்த ஜமுனா ரசித்துக் கொண்டிருக்க, 'டிடிங்.....டிடிங்.....' என வாசலில் காலிங் பெல் கரெக்டாக அந்த நேரம் பார்த்து அழைத்தது.
சிறிது நேரம் கழித்து இவர்கள் அமர்ந்திருந்த அறையின் கதவு 'டொக்......டொக்....' என தட்டப்பட்டது.
ரஞ்சித் வேகமாக போய் கதவைத் திறக்க வெளியில் அவனுடைய உதவியாளர் கவின் நின்று கொண்டிருந்தான்.
"என்ன கவின் எனிதிங் இம்பார்டன்ட்?"
"எஸ் சார், கொஞ்சம் பர்சனல் ப்ளீஸ் கம் வித் மி, சார்"
"ஒகே, ஜஸ்ட் எ மினிட் ", எனச் சொல்லியவன் பின்னால் திரும்பி மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த மாலாவிடம், "மாலாம்மா, இதைப் பற்றி யோசிக்காமல் கொஞ்சம் ரெஸ்ட் எடு. ஜமுனா, ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் ஹர், இப்ப வந்துடறேன், என சொல்லிவிட்டு விறுவிறுவென ரூமை விட்டு வெளியில் வந்தான் ரஞ்சித்.
ரஞ்சித் மிகப்பெரிய தோல் தொழிற்சாலையின் முதலாளி சிறிய அளவில் தொடங்கிய தொழிற்சாலை பின்பு மிகப்பெரிய அளவில் விஸ்வரூபமாக வளர்ந்து பல கிளைகளை பல நகரங்களில் துவங்க வைத்தது.
தொட்டில் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட ரஞ்சித், அன்னை கருணை இல்லத்தின் செல்லப் பிள்ளையாக மாறி பலரின் அன்பிற்கும் ஆளாகி, படிப்பிலும், விளையாட்டிலும், சிறந்து விளங்கி தன்னுடனே அதே இல்லத்தில் வளர்ந்து வந்த மாலாவை விரும்பித் திருமணம் செய்துகொண்டான்.
அன்பு, அமைதி, அடுத்தவரை அரவணைத்து அனுசரித்து போவதில் ரஞ்சித் போன்று யாரும் இல்லை என மதர் எலிசபெத் எப்பொழுதும் பெருமையாக சொல்லுவார். கடின உழைப்பு அவனை எப்படியும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதேசமயம் அவனுள் ஒரு கர்வத்துடன் கூடிய பயத்தையும் உருவாக்கியது. அதனால்தான் என்னவோ அவனையும் அறியாமல் அவன் மற்றவரை அணுகும்முறையும் மாறிப்போனதை அவன் உணரவே இல்லை.
"கவின், என்ன பிரச்சினை?"
"சார், நீங்களே வந்து பாருங்கள்"
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வீட்டின் வரவேற்பறைக்கு வந்தனர்.
அங்கே சோபாவில் காக்கி யூனிபார்மில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்.
--
ஜோதி அப்படியே விக்கித்துப் போனாள்.
"பாப்பா.... பாப்பா...."
"அம்மா... அம்மா....." என அழுதுகொண்டே காற்றினில் கைகளை அலையவிடும் அனாமிகாவை கண் கொண்டு காண முடியாமல் அழுதாள் ஜோதி.
அழுது அழுது அப்படியே தூங்கிப் போனாள் அனாமிகா.
வெளியில் நர்ஸ் டாக்டரிடம், "டாக்டர், அனாமிகா கண் திறந்துவிட்டாள்.அம்மா... அப்பா.... அப்படின்னு அழுதுகிட்டே இருக்கா டாக்டர்" என்று சொல்ல,
"தாங்க் காட், சிஸ்டர், குழந்தையை நல்லபடியா பாத்துக்கோங்க நான் சாரோட அங்கு வந்துடறேன்"
"அனாமிகா.. அனாமிகா... கண்ணைத் திறம்மா" டாக்டர் மெதுவாக அவளின் தோளில் தட்டி எழுப்ப மெல்ல கண் திறந்து பார்த்தாள் அவள்.
எதிரே அவர்கள் குடும்ப நண்பரும் ரஞ்சித்தின் பிசினஸ் பார்ட்னருமான அருண்ராஜ் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அருகில் அழுது அழுது கண்கள் சிவந்த நிலையில் ஜமுனா, மாலாவின் தோழி, அவனது மனைவி நின்றிருந்தாள்.
"அங்கிள்.... அம்மா.... அம்மா..... எங்கே அங்கிள்?" எனக்கேட்டபடி அனாமிகா வேகமாக படுக்கையிலிருந்து எழுந்திருக்க, அவ்வளவுதான் அதுவரை அழுதபடி நின்றிருந்த ஜமுனா அவளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டாள்.
"ஜமுனா ஆண்ட்டி, அம்மா உங்க வீட்டிலே இருக்காங்களா? அப்பா எங்கே? நான் அவரைப் பார்க்கவே இல்லையே?" என்று கூறியபடியே அனைவரையும் தவிர்த்து வாசலை நோக்கி அவள் ஓட எத்தனிக்க, கால்கள்..... அவளுடைய கால்களை அசைக்கவே முடியவில்லை அவளுக்கு.
"அம்மா.... வாங்கம்மா..., அப்பா..." என அழுதுகொண்டே தன்னுடைய கால்களை அவள் ஓங்கி அடிக்க ஆரம்பிக்க,
"அழாதடா செல்லம்... இனிமே ஆண்டியும் நானும்தான் உனக்கு அம்மா, அப்பா எல்லாமும்" எனக் கூறியவன் துக்கம் தாங்காமல் அழுதுவிட்டான் அருண்ராஜ்.
இதைக் கேட்ட அனாமிகா அந்த பத்து வயதில் என்ன புரிந்ததோ அப்படியே மீண்டும் மயக்க நிலைக்குப் போக, ஜோதி ஓடி வந்து அவளைத் தாங்கி படுக்கையில் கிடத்த, "மாலா, நான் என்னடி பண்ணுவேன்? என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டீங்களே?" என 'ஓ 'வென அழுதாள் ஜமுனா.
(பயணம் தொடரும்)
(N DEEPALAKSHMI , B.T.ASST IN ENGLISH , GHSS - SATHUVACHARI , VELLORE)