ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!

Meenakshi
Jan 17, 2026,06:16 PM IST

சென்னை: இது ஜனநாயகம் இல்லை. கேடுகெட்ட பணநாயகம். ஆட்சி முறையில் மாற்றம் தேவை. ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை. பணி நீக்கம் செய்ய வேண்டும். அந்த மாற்றம் தான் தற்போது தேவை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகள் குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை. ஏற்கனவே வழங்கப்படும் ஆயிரம் ரூபாயோடு, இன்னொரு ஆயித்தை சேர்த்து வழங்குவதால், தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக மாறும் அவ்வளவு தான். 




 இலவச பயணத்தை ஆண்கள் கேட்டார்களா?. ஏற்கனவே போக்குவரத்துத் துறை ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பில் செல்கிறது, இப்போது இந்த செலவை எங்கிருந்து எடுப்பார்கள். இது நல்ல திட்டமா, நஷ்டமா?. சரி இலவச பேருந்து பயணம் என கூறும் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்துடன் அந்த பேருந்தில் செல்வாரா.? அந்த அளவிற்கு பேருந்து தரமாக இருக்குமா? இப்போது ஓடும் பேருந்துகள் கைலான் கடை இரும்பு போல் தான் உள்ளது.


ஏற்கனவே இலவசமாக பயணிக்கும் பெண்களிடம், நீ ஓசியில் தானே வருகிறாய், அப்படி ஓரமாக போய் நின்றுகொண்டு வா என்று பேருந்துகளில் கூறுவதை கேட்டதில்லையா? ஏற்கனவே இரு ஆட்சிகளிலும் கோழிக் கூடு போல் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்த வீடுகளில் யாராவது அந்த வீட்டில் போய் இருப்பார்களா? புதிதாக, ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்டத்தை சொல்லச் சொல்லுங்கள். அதை விடுத்து பழைய திட்டத்தையே கூறிக்கொண்டுள்ளார். இது ஜனநாயகம் இல்லை. கேடுகெட்ட பணநாயகம். ஆட்சி முறையில் மாற்றம் தேவை. ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை. பணி நீக்கம் செய்ய வேண்டும். அந்த மாற்றம் தான் தற்போது தேவை என்று தெரிவித்துள்ளார்.