நடிகன் (சிறுகதை)
- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
சூட்டிங் ஸ்பாட் களை கட்டிக் கொண்டிருந்தது. ஊருக்கு ஒதுக்குப்புறமாய் ரகசியமாய் நட ந்தாலும், விஷயம் கசிந்து உள்ளூர் தலைகள் சில முண்டியடித்துக் கொண்டிருந்தது!
லோக்கல் லொகேஷன் ஏஜென்ட், கூட்டத்தை கட்டுக்குள் வைத்து, தன் கண்ணியம் காத்தார்! அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் சிலர், அங்கும் இங்கும் பரபரத்துக் கொண்டிருக்க...ஒரு அஸோஸியேட் டைரக்டர் அந்த டாப் ரேடட் நடிகைக்கு காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார்.
கெச்சலாய் கோதுமை நிறத்தில் இருந்த அவள், அதை கவனித்ததாக தெரியவில்லை! நொடிக்கு ஒருமுறை கூந்தல் (!) கோதி, தேவையில்லாமல் இளித்து வைத்தாள்!
லைட் மேன்கள் வெயிலில் கருகி வெந்துகொண்டிருக்க, மேக்கப் மென்களும் - உமென்களும் மேக்கப் கிட்டோடு ஒதுங்கி நின்றார்கள்! உள்ளூர் குசும்புக்காரன் ஒருவன் உற்சாக மிகுதியில் விசிலடித்துக் கொண்டிருந்தான்.
ஒப்புக்கு சப்பாணி காமெடியன் ஒரு மணிநேரத்துக்கு மேல், ஒன்றும் புரியாமல் நகத்தை கடித்துக் கொண்டிருக்க,புரடக்சன் மேனஜர் கைபேசியில் யாரையோ கடிந்து கொண்டிருந்தார்!
ஒரு 80's சீனுக்கான முன்னோட்டம் போய்க் கொண்டிருந்தது. சும்மா சொல்லக்கூடாது, ஆர்ட் டைரக்டர் மினிமம் மெட்டீரியல்ஸ் வைத்து , அத்தனை வித்தைகளையும் காட்டி, அதகளப்படுத்தி இருந்தார்!
காஸ்ட்யூம் டிசைனருக்கு சொல்ல வேண்டுமா என்ன? குதிரைக்காது காலரும், பெல் பாட்டம் பேன்டும், பரட்டை தலையுமாக, சில சைடு ஆக்டர்ஸ் சலம்பிக் கொண்டிருந்தனர்! ஒரு அசிஸ்டன்ட் ஸ்கிரிப்ட்டை மும்முரமாய் மேய்ந்து கொண்டிருந்தார்.
சூட்டிங் வேன் டிரைவர்களும், ஆர்ட் மெட்டீரியல்ஸ் லாஜிஸ்டிக் டிரைவர்களும் கைபேசியில் காலத்தை கரைத்தனர். கேமரா ரெடி என்றதும், கூட்டம் சிலிர்த்துக்கொண்டு ஒரு ராணுவ மிடுக்கு காட்டியது.
தோளில் துண்டு போட்டு அதிசயமாய் தொப்பி இல்லாமல் இருந்த டைரக்டர் சாட் ஓகே சொல்ல கேமரா கிளிக்க தொடங்கியது...!
இவை எதிலும் நாட்டம் இல்லாமல் தூரத்துக் கேரவனில், பவுன்சர்கள் பாதுகாப்போடு தன்னை பாதுகாப்பு வளையத்துக்குள் அடைத்துக் கொண்டிருந்தான் ஹீரோ கௌஷிக். தென்னிந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹீரோ. ஓடும் குதிரை. தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நாயகன். தியேட்டர் ஓனர்களின் நிஜ ஹீரோ!. அனைத்து தரப்பும் விரும்பும் நடிகன்! கோடான கோடி ரசிகர் கூட்டம். படம் ஒன்றுக்கு 200 பிளஸ் சி தேறும்! பணம் புகழுக்கு பஞ்சமில்லை. அரசியல் நெருக்கடி உண்டு. ஆனால் அரசியல் ஆர்வம் இல்லை!
யூனிக் ஆனவன். குறித்த நேரத்துக்கு முன் ஸ்பாட்டுக்கு வந்துவிடும் பங்க்சுவாலிட்டி. டிக்னிட்டி! கோபக்காரன் அதே நேரம் குணவானும் கூட! கனவு உலகின் கனவு நாயகன். திரைத்துறையின் விசுவாமித்திரன். மாற்றான் தோட்டத்து மல்லிகைப்பூ மலர்ந்தாலும், மணத்தாலும் கசக்கிப் பிழியாத கண்ணியவான். தானுண்டு தன் வேலை உண்டு என்ற உன்னத ரகம்.
இயக்குனர் தயாரிப்பாளர் இவர்களின் குட்புக்கில் முதல் மதிப்பெண் அவனுக்கு. கால் சீட் கணக்கு எழுதி அவனைவிட அவன் டைரி கதறும்! மூச்சு முட்டும் அளவு சூட்டிங் -- மீட்டிங்! பொறுங்கள்... நீங்கள் கேட்பது புரிகிறது!
அவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே, ஏதேதோ உருட்டிக் கொண்டிருக்கிறேன். வாருங்கள் கேரவனுக்குள் மூக்கை நீட்டலாம்!
கேரவனின் அந்த 18 டிகிரி குளிரிலும், அவன் கலைந்து போயிருந்தான்! களைத்து போய் இருந்தான்!
சிவந்த கண்களில் தூக்கம் மிச்சம் இருந்தது. ஆள் விழுங்கும் சோபாவில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்து இருந்தவனை -- செல்போன் சிணுங்கள் சிதறடித்தது! எதிரில் மனைவி!
" என்னங்க"
அவள் கேட்ட அந்த "என்னங்கவில்" உயிர் இல்லை!
குரல் இறுகிப்போய், கருகிப் போய், இருண்டு கிடந்தது! சிதறிக் கிடந்தவன் சுதாரித்து,
" ஹாய்.. ஆதினி எப்படி இருக்க? லஞ்ச் எல்லாம் முடிச்சிட்டியா? செல்ல குட்டி என்ன பண்றா? டாக்கி நல்லா சாப்பிட்டானா? இல்ல நான் வல்லேன்னு அடம் பிடிக்கிறானா? "
எதிர்முனை, பதில் இல்லாமல் ஊமை ராகம் பாடியது!
கைபேசி இப்போது மகளிடம் கைமாறி போனது!
" ஹாய் டாடி, எப்படி இருக்கீங்க? ஏன் டாடி வீட்டுக்கு வரல? உங்கள பாத்து எத்தனை நாளாச்சு? சீக்கிரம் வாங்கப்பா ப்ளீஸ்... அம்மா அழறாங்க ப்ளீஸ் பா..!"
மகளின் மந்திரச்சொல்... காயப்பட்டவனை மேலும் காயப்படுத்தியது!
மகளின் கூப்பாட்டில் தெரிந்தது ஏமாற்றமா இல்லை ஏக்கமா என்று கூட அவனால் இனங்கான முடியவில்லை! ஓய்வில்லாத கமிட்மெண்ட்ஸ். வீட்டுக்குச் சென்று ஒரு வாரம் ஆகிறது.
இங்கு ஒப்புக்கொண்ட ஒப்பந்தம் ஒரு பக்கம்! அங்கு குடும்ப நிர்ப்பந்தம் மறுபக்கம்!
இருபுறமும் அடி வாங்கும் மத்தளம் ஆகிப்போனான்! பணம் புகழ் இருந்தும், வாழ்க்கையின் இடியாப்பச் சிக்கல்கள் அவனை எரிச்சல் அடைய வைத்தது.
வாழ்க்கை சலிப்புத் தட்டியது. எங்கே சறுக்கினேன்? என்று அவனை அவனே கேட்டுக் கொள்ளும் அளவு குடும்ப வாழ்க்கை கல் எறியப்பட்ட கண்ணாடி போல் ஆகிப் போனது! மனைவி மகளைப் பார்க்க முடியாத ஏக்கம்... மறுபக்கம் அரிதாரத்தின் அவதாரம் கழுத்தை பிடித்து கவ்வியது.
அடையாளம் தெரியாது ஆளே மெலிந்து போயிருந்தான். ஒரு மாடர்ன் அசிஸ்டன்ட் டைரக்டர்,
" சார்... ஷாட் 1 ஹவர்ல ரெடி ஆயிடும்.. மேக்கப் ஸ்டார்ட் பண்ணலாம்.. "
என்று பவ்வியமாய் சொல்லவும், கௌஷிக் சுயநிலைக்கு திரும்பினான்!
அவன் மேக்கப் போட்டு முடிப்பதற்குள், நாம் சற்று பின்னோக்கி ரிவர்ஸ் கியர் போட்டு பயணித்து விடலாம்!
வானத்துப் பறவையின் உதிர்ந்த சிறகு ஒன்றை, தென்றல் தாலாட்டுவதைப் போல அவன் வாழ்க்கையும் ஒரு காலத்தில் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தது!
எல்லாம் சினிமா கிறுக்கு பிடித்த அந்த டாக்டரை பார்க்கும் வரை தான். மெடிக்கல் ரெப்பாக சுகமாக சுற்றிக் கொண்டிருந்தவனை, அவர்தான் பெர்சனாலிட்டி பெர்சன் என்று சொல்லி தன் மாப்பிள்ளை மூலம் சினிமாவுக்குள் நுழைத்தார்!
கௌசிக்கின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ முதல் படமே முக்குக்கு முக்கு கொடிகட்டி, கொலை வெறி காட்டியது. அன்றிலிருந்து அவன், இறுக்கமான சமூக பிணைப்பிலிருந்து தன்னை தனித்து கொண்டான்!
குடும்பமும் சமூகத்துக்குள் தானே இருக்கிறது?
சறுக்களும் சாதனையும் ஒரே நேரத்தில் உயரத் தொடங்கியது ! முரண்பாடே முரண்பட்ட தருணம் அது!
அன்பு மனைவி ஆதினி, பெயரைப் போலவே இனிப்பானவள்! மாடர்ன் கேர்ளாக இருந்தாலும்... நவீன வாழ்வியலை கட்டும் சேலை தலைப்பின் முந்தானையில் முடிந்து கொண்டவள்!
பத்து பொருத்தமும் கொத்தாக அமைந்த கெத்தான வாழ்க்கை! சுவைக்கு சுவை கூட்ட வந்து பிறந்தவள்தான் அன்பு மகள் துவாரகா!
மேட் பார் ஈச் அதர் என்பார்களே, அந்த வார்த்தையின் இலக்கணம் அவர்கள்! நினைத்தால் ஷாப்பிங், கடற்கரையில் கைகோர்த்து களிப்பு, பிடித்த சினிமா, அருள் வேண்டி ஆலயம்.... குது கலிக்க குழந்தை...
வேறென்ன வேண்டும் இதைத் தவிர? இப்போது குறைந்த பட்சம் கோவிலுக்கு கூட செல்ல முடியவில்லை!
எங்கு போனாலும் பாதுகாவலர், ரசிகர்களின் கூப்பாடு, பொது ஜன அன்பு தொல்லைகள்... சுதந்திரம், தனிமை, ஊர் சுற்றல், அரட்டை, குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது!
கிரௌஞ்ச பட்சிகளாய் இருந்த தம்பதியை விதி, கூட்டை கலைப்பது போல் கலைத்துப் போட்டது! நண்பா நலமா என்று நக்கலாய் கேட்டது!
ஊருக்கெல்லாம் அவன் காய்த்த மரம். அவனுக்கோ உளுத்த மரம்!
சாயம் போன வாழ்க்கை. ஒதி பெரு த்து உத்தரத்துக்கா ஆகப்போகுது என்னும் சொலவடைக்கு சொந்தக்காரன் ஆனான்!
சூட்டிங் தொடர்ந்து கொண்டிருக்க, அவனுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு, தன்னை விடுவித்துக் கொண்டு, சென்னையின் கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைந்து கொண்டு இருந்தான்!
கழுகு காட்சியில் பார்க்க கட்ட வடிவில் காணப்பட்ட அந்த பிரமாண்ட கட்டிடம், பக்கத்தில் பார்க்கும்போது மேலும் பிரமிப்பு காட்டியது!
20 அடிக்கு மேல் காம்பவுண்ட் சுவர்கள் கொண்ட கட்டிட முகப்பின் ராட்சத கருப்பு கேட்டு திறந்து, கார் உள்ளே நுழைந்தது. ஆஞ்சநேயன் போல் ஆஜானு பாகுவான செக்யூரிட்டி, எஸ் வடிவில் வளைந்து, விசுவாசம் காட்டினான்!
கட்டிப்பிடி வைத்தியம், கண்ணீர் கரைசல்கள், பாச பிணைப்புகள்... இத்தியாதி இத்தியாதி... எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு வீடே நிசப்தமாய் இருந்தது! மூவரின் மூச்சுக்காற்று காற்றில் கலந்து, காதில் குடி புகுந்தது! அவ்வளவு அமைதி.
"ஆதினி..."
கௌஷிக் கரகரக்க..
" சொல்லுங்க "என்றாள் ஆதினி.
" பாப்பாவ டான்ஸ் கிளாஸ் அனுப்பிவிட்டு வா. பேசணும்... நிறைய பேசணும்!" சொன்னவன் சோபாவிலேயே தூங்கிப் போனான்.
திடுக்கிட்டு விழிக்கும் போது மணி ஏழாகி இருந்தது. அங்கும் இங்கும் ஆதினியை தேடினான்.பார்வைக்கு தட்டுப்படவில்லை!
அப்புறம்தான் தெரிந்தது, அவள் மடியில் தான் தலை வைத்திருக்கிறோம் என்று!
கண்ணீர் பொசுக்கென பவுண்டன் ஊற்றாய் பீய்ச்சி அடித்தது.
ஆதினி அழவில்லை. அழுவதற்கு கண்ணீர் இல்லை!
" ஆதினி கேட்டுக்க... இதுக்கு மேலும் இந்த வாழ்க்கை தொடர வேண்டாம். நாம பழைய மாதிரி வாழணும்.உனக்கு நான் எனக்கு நீ அது போதும்.
பணம் புகழும் நிறைய பார்த்தாச்சு. இனியும் எதுக்கு இந்த அலைச்சல்? வாழ்க்கை வாழத்தானே?
பசிச்சா பணம் தின்ன முடியாது!
பிள்ளை கிட்ட பாசம் காட்ட முடியல. பெரிய இடைவெளி விழுந்துடுச்சு. அந்தப் பள்ளத்தை எல்லாம் நிரப்பி ஆகணும்..
உன்கிட்டயும் என்னால ஒட்ட முடியல... "
குரல் கரகரத்தது. கண்ணீர் சிந்தினான்...!
ஆதினி ஆசுவாசப்படுத்த தொடர்ந்தான்...
" கவனமா கேட்டுக்கோ... லாயர், ஆடிட்டர், மேனேஜர் எல்லார்கிட்டயும் விரிவா பேசிட்டேன். லீகலா பல வேலைகளை முடிச்சிட்டேன்!
இன்னும் மூணு மாசத்தோட என்னோட கமிட்மெண்ட்ஸ் எல்லாம் பினிஷ் ஆயிடும்.அதுக்கு மேல எந்த படத்துக்கும் கால் சீட் கொடுக்கல.ஒன்னு புரிஞ்சுக்கோ...
நான் யாரையும் ஏமாத்தல... யாருக்கும் துரோகம் பண்ணவும் மாட்டேன்!
என்னோட இந்த முடிவு இன்ட்ரஸ்ட்ரில ஸ்ட்ரக்கிள் பண்ணும் ஆனா போகப் போக சரி பண்ணிடுவாங்க!
என் ரசிகர்கள நினைச்சா தான் ரொம்ப பேத்தடிக்கா இருக்கு. இதை எப்படி எடுத்துப்பாங்கனோ இல்ல எப்படி ஏத்துப்பாங்கனோ எனக்கு தெரியல...
அவங்கள சரி பண்ண நான் ஏதாவது செஞ்சாகணும்.அவங்க இல்லாம நான் இல்ல. என்னோட இந்த அசுர வளர்ச்சி,அழியா புகழ், பணம் பங்களாவுக்கு அவங்க தான் முழு முதல் காரணி! நா முன்னால சொன்னேனே சில விஷயங்கள் லீகலா பண்ணி இருக்கேன்னு... கேளு!
" கௌஷிக் காதலர்கள்" அப்படின்னு ஒரு தொண்டு நிறுவனம் ரெஜிஸ்டர் பண்ண போறேன்! ரசிகர்கள மென்சன் பண்ணி தான் இந்த பெயரையே செலக்ட் பண்ணினேன். ஒரு பெரிய தொகை இந்த நிறுவனத்தின் பேர்ல பேங்க்ல டெபாசிட் பண்ணப்படும். தமிழ்நாடு முழுக்க 100 ஆதரவற்ற காப்பகங்கள் தத்து எடுக்கப்படும்!
நல்ல மார்க் எடுத்தும் ஹையர் எஜுகேஷன் படிக்க முடியா மாணவர்களுக்கு உதவ சொல்லி இருக்கேன்!
புயல்,மழை,பூகம்பம் வெள்ளம்னு பெரிய டிசஸ்டர் வந்தா கௌசிக் காதலர்கள் உதவி பண்ணுவாங்க... எல்லாத்தையும் விட முக்கியமா நம்ம வேளாண் குடிமகன்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும்போது, அங்க நேரடியாக ஸ்பாட் விசிட் பண்ணி, பாதிப்ப பாத்து, ஸ்பாட் காம்பன்சேஷன் பண்ண சொல்லி இருக்கேன்!
ஆதினி... உன்னையும் உன் பொண்ணையும் தவிக்க விட்டுடுவேன்னு கவலைப்படாதே... தேவைக்கு அதிகமாகவே கொஞ்சம் பண்டு மிச்சம் வச்சிருக்கே... "
அவன் சொல்லி முடிக்கும் முன்பே ஆதினி,அவன் வாய் பொத்தினாள்!
"இதையெல்லாம் நீங்க செய்யாம இருந்தா தான் நான் உங்க மேல வருத்தப்படுவேன்... எனக்குன்னு எதுவும் வேண்டாம்.நீங்க பிள்ளை மட்டும் போதும். எனக்கு என் கௌசிக் கிடைச்சிட்டான்...!!!"
கண்கள் கலங்க, ஆதினி கணவனின் முகத்தோடு முகம் புதைத்தாள்!
சில நிமிட கனத்த மவுனத்திற்கு பின் கௌசிக் தொடர்ந்தான்....
" ஆதினி கதை இன்னும் முடியல...நீ இப்போ கேட்டதெல்லாம் வெறும் முன்னோட்டம் தான்! முடிவு திர்லிங்கா இருக்கும்...!"
" என்னங்க சினிமா தனமா சஸ்பென்ஸ் வைக்கிறீங்க? "
" இது ரீல் இல்ல ஆதினி.. ரியல்!" சொன்னவன் அவளை ஏறிட்டு பார்க்க,அவள் குழம்பிப் போய் கேட்டாள்!
" நீங்க சொன்ன மாதிரியே எல்லாத்தையும் பண்ணிட்டா எல்லாம் ஓகே தான்... இதுல என்ன பீடிகை இருக்கு? "
" ஓகே ஆதினி... நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் இப்படியே ரியலா மவுண்ட் ரோட்டை சுத்தி வரலாமா?இல்ல மகாபலிபுரம் போய் வரலாமா? நம்மால் அது முடியுமா? "
" இப்போ என்ன சொல்ல வர்றீங்க? ஐ கேன் நாட் அண்டர்ஸ்டாண்ட்! ப்ளீஸ் பி சீரியஸ்!"
" சீரியஸ்தான் ஆதினி... திருப்பதிக்கே நீ நடந்து போனாலும் நான் சொன்ன ரெண்டும் நடக்காது.எனக்கு என் பழைய வாழ்க்கை முழுசா வேணும். இதுல எந்த ஒரு பிசுரும் இருக்கக் கூடாது "
" கொஞ்சம் டீடெய்லா சொல்லுங்க எனக்கு ஒண்ணுமே புரியல "
" அடுத்து வர்ற decade நமக்கு ரொம்ப முக்கியமானது சில விஷயங்களை நாம இழந்து தான் ஆகணும்... ஒன்னை இழந்தாதான் இன்னொன்னு பெற முடியும் அப்படிங்கிறது தான் இயற்கையின் மாறாத விதி. புரிஞ்சுக்கோ ஆதினி! நல்லா கேட்டுக்கோ...
நாம இந்தியாவுல இருந்தா நமக்கு பிரைவேசி அப்படிங்கறது இல்லாம போயிடும்..நாம பாரின் போய் ஒரு பத்து வருஷம் செட்டில் ஆகலாம்னு இருக்கிறேன்..!
கான்டினென்ட் கூட செலக்ட் பண்ணிட்டேன். சிங்கப்பூர் மலேசியா வேண்டாம். ஏன்னா அதுவும் தமிழ்நாடு மாதிரி தான்.
யுஏஇ வேண்டாம். வெயில் இருக்கும். அமெரிக்கா வேண்டவே வேண்டாம். நாம ஐரோப்பால செட்டில் ஆயிடலாம். ஒரு பத்து வருஷத்துக்கு அப்புறம் நாம நம்ம தாய் நாட்டுக்கு திரும்பி வந்துடலாம். அப்போ இங்கே காட்சிகள் மாறி இருக்கும். என்னையும் கொஞ்சம் கொஞ்சமா மறந்து இருப்பாங்க... பெரிய பிரச்சினைகள் இருக்காது..! நான் சொல்றது சரிதானே? "
ஆதினி உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
" ஆமாங்க... நம்ம வேலைக்காரி கோமதி, வாட்ச்மேன் அண்ணன், மேனேஜர் சார் இவங்களுக்கு எல்லாம்... " ஆதினி இழுவை போட்டாள்...
" எல்லோருக்கும் ஆல்ரெடி செட்டில்மெண்ட் ஆயிடுச்சு.பாப்பாக்கு இன்னும் மூணு மாசத்துல சம்மர் லீவ் வந்துடும். எனக்கும் மூணு மாசத்துல செட்யூல் எல்லாம் முடிஞ்சிடும்...! நம்மோட இந்த பிளான் ஹைலி சீக்ரெட்.... டோன்ட் டெல் எனி ஒன்... "
கௌஷிக் சொல்லி முடிக்க மனைவி கணவன் மார்புதைந்தாள்!
" என் நாட்டை விட்டு பிரிகிறத நெனச்சாத்தான் எனக்கு நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கு "
" நோ மோர் பீலிங்ஸ்... நாம அங்க ஏதாவது வேலைக்கு போற மாதிரி நினைச்சுக்கலாம்... அப்படி மனச தேத்திக்கலாம்..!"
" ஓகே" என்றனர் இருவரும் கோரஷாய்!
மூன்று மாதம் முடிந்து போய் இருக்க, அந்த போயிங் 737 இயந்திரப் பறவை, மீனம்பாக்கம் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் கௌசிக் குடும்பத்திற்காக தன் கால்கடுக்க காத்துக் கொண்டிருந்தது!
தலைவன் அடுத்த பட அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர் கூட்டமும்....எஜமான் எப்போது வருவான் என்று அவன் டாக்கியும் ஏங்கிக் கொண்டிருந்தது நிரந்தரமாக...!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)