மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துங்க.. முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!
சென்னை: டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசிடம் இணக்கமான உறவு வைத்துக் கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பத்தாவது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட அனைத்து மாநில முதல்வர்களும், யூனியன் பிரதேச முதல்வர்களும், கலந்து கொண்டுள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
குறிப்பாக இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை விடுவிக்க குரல் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விஷயம். ஆனால் இந்த ஆண்டு கலந்து கொண்டிருக்கிறார். என்னைப் பொருத்தவரை தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டங்கள் கேட்டு வாங்கி வந்தாலும் அது முதலமைச்சர் இருக்கு பெருமையாகத் தான் இருக்கும்.
அதே நேரத்தில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவு வைத்து தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர் மத்திய அரசுடன் இணக்கமான உறவுகளை வைத்துக்கொண்டு நிதிகளை பெற்று மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் முதலமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.