ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
நெல்லை: தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், பாஜக மூத்த தலைவரும் எம்.எல்.ஏ-வுமான நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
யார் இந்த ஆதவ் அர்ஜுனா?
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, "90 சீட், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி தருகிறோம் என விஜய்யிடம் பேரம் பேசப்பட்டது. ஆனால் முதல்வர் பதவி வேண்டும் என்பதற்காக டில்லிக்கு அடிபணிய மாட்டோம். 234 தொகுதிகளிலும் தனித்தே களம் காண்போம்" என நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதற்கிடையில் பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொடர்ந்து விஜய்யிடம் கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வந்தன. ஆனால் இதற்கு பாஜக, அதிமுக நிர்வாகிகள் இல்லை என்று பதி கூறி விட்டனர். இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக எந்தவிதமான கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. அதே போல், ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் பாஜகவுடன் கூட்டணி பேரம் பேசியதாகக் கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை." என தெரிவித்தார்.
தேர்தல் களம் 2026: நிலவரம் என்ன?
இந்தச் சந்திப்பின் போது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் நிலைப்பாடு குறித்தும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலிமையான கூட்டணியை அமைக்க பாஜக விரும்புவதாகவும், ஆனால் தவெக-வுடன் இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தப் பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் பொய்யானவை என நேற்று, மாமல்லபுரத்தில் நடைபெற்ற இஃப்தார் நோம்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யும் தெளிவு படுத்தி விட்டார்.
இந்த சமயத்தில் ஆதவ் அர்ஜூனாவை யார் என்றே தெரியாது என நயினார் நாகேந்திரன் கூறி இருப்பதில் இருந்து இந்த விவகாரத்தில் பாஜக எந்த அளவிற்கு கோபத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கட்சி தலைமையின் அனுமதி இல்லாமல் தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள் இது போல் பேசி வருவதை பலரும் கண்டித்துள்ளனர்.