NDA கூட்டணியில் தவெக விஜய்?.. நயினார் நாகேந்திரன் அளித்த அதிரடி விளக்கம்
Mar 14, 2026,04:59 PM IST
சென்னை : தமிழக அரசியலில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியதில் இருந்தே, அவர் யாருடன் கூட்டணி வைப்பார் அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்ற விவாதங்கள் தொடர்ந்து மேலெழுந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையப்போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய நயினார் நாகேந்திரன் கூறுகையில், நடிகர் விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவாரா என்பது குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் என் கவனத்திற்கு வரவில்லை" என்று கூறி இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விஜய்யின் டெல்லி பயணம் பின்னணி என்ன?
நடிகர் விஜய் திடீரென டெல்லி செல்வது குறித்த செய்திகள் பரவிய நிலையில், அது அரசியல் ரீதியான பயணமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன், "கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 சம்பவம் தொடர்பான விசாரணைக்காகவே விஜய் டெல்லி செல்கிறார். இதற்கும் அரசியலுக்கும் அல்லது கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று குறிப்பிட்டார். இதன் மூலம் விஜய்யின் டெல்லி பயணம் முற்றிலும் ஒரு சட்டரீதியான அல்லது விசாரணை நிமித்தமான பயணம் என்பதும், அதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்பதும் பாஜக தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தொடரும் வதந்திகள் :
விஜய், என்டிஏ கூட்டணிக் வருகிறாரா என்பதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனே நேரடியாக விளக்கம் அளித்து விட்டார். இருந்தாலும் விஜய் கூட்டணிக்கு ஓகே சொல்லி விட்டதாகவும், 90 சதவீதம் அவர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, நேற்று நடைபெற்ற தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் ஒரு தரப்பினர், இது முதல் தேர்தல். முக்கியமான தேர்தல் என்பதால் மத்தியில் ஆளும் பலம் மிக்க தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது தான் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது என விருப்பம் தெரிவித்திருப்பதாக ஒரு தகவலும் சொல்லப்படுகிறது.