எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
மதுரை: எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே என்று வருத்தப்படுகிறேன். எனக்கு 30 ஆண்டுகளாகத் தெரியும். அவரை முழுவதுமாக உணர்ந்தவன் என்ற அடிப்படையில் வருத்தப்படுகிறேன் என்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். அதன்பின்னர் செங்கொட்டையனை அவ்வப்போது நயினார் நகேந்திரன் சீண்டுவதும் அதற்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்து வருவதும் போன்ற விஷயங்கள் நடந்து வருந்தன.
இந்நிலையில், செங்கோட்டையனை மீண்டும் சீண்டி இருக்கிறார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். இது குறித்து மதுரையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அண்ணன் செங்கோட்டையனை எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவரை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார் என்ற வருத்தம் தான். தமிழ்நாட்டின் கூட்டணியில் டெல்லி எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை. பாமக கூட்டணியை இறுதி செய்தது எடப்பாடி பழனிசாமி தான் என்றும்,
டிடிவி தினகரன் கூட்டணியும் சென்னையில் தான் இறுதி செய்யப்பட்டது. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த வகையில் சரி என்பது தெரியவில்லை. எம்ஜிஆர் காலத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது திமுக தான். 1972க்கு பின் எம்ஜிஆரிடம் தோற்றுக்கொண்டே இருந்தார்கள். அதேபோல் அதிமுகவில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் தொடக்கம் முதலே கூறி வருகிறேன். அது எல்லோருக்கும் தான் பொருந்தும். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் வருவார்கள் என தெரிவித்துள்ளார்.