தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
சென்னை: அகில இந்திய தலைமை சொல்வதை கேட்பதுதான் எனது பொறுப்பு. தேஜ கூட்டணியை பொறுத்தவரை, இபிஎஸ்யை தலைவராக உள்துறை அமைச்சர் தான் அறிவித்தார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்தது. ஆனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைக்கவில்லை. அதன் பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணியில் இருந்தது. ஆனால், அதிமுக கூட்டணியில் இல்லை. அண்மையில் தமிழக வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளை பாஜக கூட்டணியில் இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கினார்.
எனக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே தனிப்பட்ட விதத்தில் பிரச்சினை இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேற நான்தான் காரணம் என டிடிவி தினகரன் எதன் அடிப்படையில் கூறுகிறார்? திடீரென என் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பலமுறை பேசியபோதும் அவர் என்னிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. டிடிவி தினகரன் பேசியது மன வருத்தத்தை அளிக்கிறது.
தற்போதைய கூட்டணியை உருவாக்கியவர் அமித்ஷா தான். நான் தற்போது மாநில தலைவர். தேசிய தலைமை எடுக்கும் முடிவை எங்களால் தடுக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்பதெல்லாம் கிடையாது. கூட்டணிதான் முக்கியம். எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை ஏற்கவில்லை என டிடிவி தினகரன் கூறுகிறார். எடப்பாடிபழனிசாமி முதல் அமைச்சர் வேட்பாளராக வெற்றிபெற வேண்டும் என நெல்லை மாநாட்டில் அண்ணாமலை நேரடியாக அறிவித்தார்.
செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டது அவர்களில் கட்சி விவகாரம். இதில் நான் கருத்து சொல்ல முடியாது. தான் கோவிலுக்கு செல்வதாக செங்கோட்டையனே தெரிவித்துவிட்டார். டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க அவர் செல்லவில்லை. அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நானும் கூறி வருகிறேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் தொண்டர்கள் செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் எதிரியை வீழ்த்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.