அரசுப் பணிகளை விற்றுவிட்டதா திமுக? - தேர்வு முடிவு தாமதத்தால் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

Meenakshi
Feb 26, 2026,06:05 PM IST

சென்னை:  தேர்வு முடிவுகளை வெளியிடாமலேயே, அரசுப்பணிகளை விற்று திமுக அரசு கல்லா கட்டிவிட்டதா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும். கூட்டுறவுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக SRB மற்றும் DRB தேர்வுகள் நடத்தப்பட்டு 100 நாட்களாகிவிட்டன. உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் TRB தேர்வு நடத்தப்பட்டு 60 நாட்களாகிவிட்டன. ஆனால், இவ்விரண்டு தேர்வுகளுக்கான முடிவுகளை இன்றுவரை வெளியிடாமல், இளைஞர்கள் எதிர்காலத்தோடு விளையாடி வருகிறது திமுக அரசு.




கொடுத்த வாக்குறுதிப்படி அரசுத் துறைகளில் 5.5 காலிப்பணியிடங்களை நிரப்பும் திறன்தான் திமுக அரசிடம் இல்லையென்றால், உடனுக்குடனேயே தேர்வு முடிவுகளை வெளியிடும் திறன்கூட இல்லையா? அல்லது, தேர்வு முடிவுகளை வெளியிடாமலேயே, அரசுப்பணிகளை விற்று திமுக அரசு கல்லா கட்டிவிட்டதா?


மாதக்கணக்கில் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சிக்கும் மெத்தன திமுக அரசுக்கு, மாதந்தோறும் ஒரு வெற்றுப் பெருமை விழா நடத்துவது ஒன்று தான் கேடு! கல்விக் கடனையும் ரத்து செய்யாமல் வேலைவாய்ப்பையும் வழங்காமல் தவிக்கவிடும் அறிவாலயம் அரசுக்கு வரும் தேர்தலில் முடிவு கட்டுவர் தமிழக இளைஞர்கள் என்று தெரிவித்துள்ளார்.