நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
- பூரணவள்ளி சேகர்
கவிதாவும் கண்ணனும் கவினின் மகள் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள காரில் சென்று கொண்டிருந்தனர்.
கவிதா உடல் நலத் தொந்தரவு காரணமாக நிறைய நிகழ்வுகளில் கண்ணன் மட்டும் தான் கலந்து கொள்வார். தவிர்க்க முடியாத நிகழ்வுகளுக்கு மட்டுமே கவிதாவைக் காரில் அழைத்துச் செல்வார்.
காரில் பயணிக்கும் போது கவிதாவின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
கண்ணனும் கவினும் நண்பர்கள். கண்ணன் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கவின் சென்னையில் சுயதொழில் செய்து வந்தார். கவினுக்குத் தன் மாமன் மகளைத் திருமணம் செய்ய மிகவும் ஆசை.
கவினின் மாமன் மகளான ஜனனிக்கும் ஆசை இருந்தது. ஆனால் பெற்றவர்கள் குடும்பப் பகை காரணமாக திருமணம் செய்து வைக்க மறுத்தனர். ஒரு நாள் இருவரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கவின் ஜனனியுடன் மதுரைக்கு வருவதாகவும் திருமணத்திற்குப் தேவையான திருமாங்கல்யம் பட்டுப் புடவை ஆகியனவற்றைத் தான் வாங்கி விட்டதாகவும் மறுநாள் ஏதாவது ஒரு கோயிலில் திருமணம் செய்து .வைக்க வேண்டும் என்று கண்ணனுக்கு வேண்டுகோள் வைத்தார்.
தன் வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடப்பதாகவும் அங்கே சொல்லி திருமணம் செய்யலாம் என்று கண்ணன் கூறினார். கவிதாவிற்கு தகவல் தெரிந்தபோது பெற்றவர்கள் எவ்வளவு மனத்துயரில இருப்பார்கள் என்று தன் கருத்தைக் கூறினாள்.
தவிர்க்க முடியாத சூழலில் கவினும் ஜனனியும் நேரடியாக வந்தபோது தன் மனக் கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு சகஜமாக இருந்தாள். திருமணத்திற்கு புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து கொடுக்கத் தன் ஒன்று விட்ட சகோதரர் நவீன் அழைக்கப்பட்டார்.
திருவிழாவிற்கு வந்த மக்கள் அனைவரும் வாழ்த்த புகைப்படம் மற்றும் வீடியோவில் திருமணப் பதிவு நிகழ திருவிழா விருந்துடன் திருமணம் இனிதே நடந்தது.
மனதில் சஞ்சலத்துடன் இருந்த கவிதா ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். எதிரில் நின்ற ஆட்டோவில்
கலங்காதே...
நல்லதே நடக்கும்
என்ற வாசகங்கள் தென்பட்டன.
மணமக்கள் இனிதே இணைந்து வாழ்ந்தால் தான் தன் குற்ற உணர்வு குறையும் என்று மனப் போராட்டம் நடத்திய கவிதாவிற்கு அம்மனே நேரில் வந்து அவளை அமைதிப் படுத்துவதாக ஒரு மகிழ்வு ஏற்பட்டது.
திருமணம் முடிந்து சென்னை சென்றபோது கவினின் அக்காவிடம் தகவல் தெரிவித்தார் கவின். அனைவரும் ஏற்றுக் கொண்ட பின் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா? பத்திரிகை வைத்து அழைத்தது போல் இவ்வளவு கூட்டம் மற்றும் வீடியோ ஏற்பாடு எப்படி ஒரே நாளில் ஏற்பாடு செய்தாய்? எல்லாம் இறைவன் அருளால் நடந்தது என்று மட்டுமே கவின் பதில் கூறினார்.
காலங்கள் உருண்டன. நாளை அவர்களின் மகளுக்குத் திருமணம். திருமண விழாவில் நீங்கள் இருவரும் நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என்று கவினும் ஜனனியும் நேரடியாக வந்து பத்திரிகை கொடுத்து அழைத்ததனர்.
கவினும் ஜனனியும் உண்மையான அன்புடன் இருந்ததாலும் அம்மன் திருவருள் நிறைந்ததாலும் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது. கவிதாவும் கண்ணனும் மன மகிழ்வுடன் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)