ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?
- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
தேசியக்கொடி என்றால் நம் நினைவுக்கு வருவது கொடிகாத்த குமரன் என்பதைப் போல் தேசிய கீதம் என்றால் நம் நினைவிற்கு வருவது டிசம்பர் 27 ஆக இருக்கட்டும்.
சுதந்திர தினம், குடியரசு தினத்தைப் போன்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டிய தினம் தான் டிசம்பர் 27. அப்படி அந்த நாளில், அதாவது இன்றைய தினம் என்ன சிறப்பு என்று பார்ப்போம்.
தேசிய கீதமான ஜன கண மன பாடல் 1911 ம் ஆண்டு டிசம்பர் 27 முதல் முதலாக கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. இந்தியாவின் தேசிய கீதமாக அனைவரும் பாடி வரும் ஜன கண மன பாடலை இரபீந்திரநாத் தாகூர் எழுதினார். 5 பத்திகளை கொண்ட இப்பாடலின் முதல் பத்தி மட்டுமே தேசிய கீதமாக பாடப்படுகிறது.
வங்காளதேச பிரிவினையின் போது இந்த பாடலை தாகூர் எழுதினார். வங்காள மொழியில் எழுதப்பட்ட இந்த பாடல் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
இந்நிலையில், 'ஜன கண மன' பாடலானது முதல் முதலாக 106 ஆண்டுகளுக்கு முன்பாக இன்று தான் பாடப்பட்டது.
தாகூர் உறவினரான சரளா தேவி என்பவர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பாடினார். 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி ஜன கண மன பாடலானது இந்தியாவின் தேசிய கீதமாக அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின் நாட்டின் அனைத்து இடங்களிலும் ஜன கண மன பாடல் ஒலிக்கப்பட்டது.
52 விநாடிகள் பாடப்படும் இந்த பாடல் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் முடிவில் பாடப்படும். தேசிய கீதம் இயற்றப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இப்பாடல் கேட்பவர்களுக்கு எழுச்சியை ஏற்படுத்துகிறது. நாம் அனைவரும் நாட்டுப்பற்றை போற்றுவோம். நமது குழந்தைகளுக்கும் இந்த தினத்தைப் பற்றி சொல்லுவோம்.
ஜெய்ஹிந்த்