இன்று நவராத்திரி 5ம் நாள்...அலங்காரம், மலர், நைவேத்தியம் முழு விபரம் இதோ
நவராத்திரியின் 5ம் நாள் என்பது மகாலட்சுமியை வழிபடுவதற்கான இரண்டாவது நாள் ஆகும். பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமியை வழிபடுவதற்கு ஏற்ற மங்களகரமான நாளாகும். சுக்கிரனின் ஆதிக்கமும், மகாலட்சுமியின் அருளும் நிறைந்த வெள்ளிக்கிழமையில், நவராத்திரியின் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டினை மேற்கொள்வது மிகவும் சிறப்பானதாகும். அதுவும் முருகப் பெருமானுக்குரிய விசாகம் நட்சத்திரம், வாராஹி அம்மன் வழிபாட்டிற்குரிய பஞ்சமி திதி ஆகியவை ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் மகாலட்சமியை வழிபடுவதால் செல்வ வளம் பெருகும்.
நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமி திதியை, லலிதா பஞ்சமி என்றும், இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதத்தை லலிதா பஞ்சமி விரதம் என்றும் குறிப்பிடுவது உண்டு. இது சித்தர்களின் குல தெய்வமாக கருதப்படும் லலிதா திரிபுரம் சுந்தரியை வழிபடுவதற்குரிய நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி உள்ளிட்ட பதிகங்களை பாடி வழிபடுவதால் வாழ்க்கையில் இருக்கும் கடுமையான பிரச்சனைகள், கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவதற்கு உடனடியாக வழி கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி தொழில், வியாபாரம் ஆகியவற்றில் இருக்கும் பிரச்சனைகள், தடைகள் விலக வழி கிடைக்கும்.
செல்வம், ஞானம், தைரியம், நிம்மதி ஆகியவற்றை அருளக் கூடிய தெய்வமாக லலிதாம்பிகை கருதப்படுவதாலும், பராசக்தியின் அம்சமாகவும் விளங்குவதால் நவராத்திரியின் ஐந்தாம் நாளில் இவளை வழிபடுவது சிறப்பு. அதோடு மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றிய வைஷ்ணவி தேவியையும் வழிபடுவது சிறப்பு.
நவராத்திரி 5ம் நாள் வழிபாடு :
அம்பிகையின் பெயர் - மோகினி (வைஷ்ணவி)
கோலம் - பறவை வகை கோலம்
மலர் - மனோரஞ்சிதம் அல்லது பாரிஜாதம்
இலை - திருநீற்றுப் பச்சை இலை
நைவேத்தியம் - தயிர் சாதம்
சுண்டல் - பூம்பருப்பு சுண்டல் (கடலை பருப்பு)
பழம் - மாதுளை பழம்
ராகம் - பந்துவராளி
நிறம் - சிவப்பு
நவராத்திரியின் 5ம் நாளில் சொல்ல வேண்டிய மந்திரம் :
மூல மந்திரம் :
"ஓம் ஹ்ரீம் க்ளீம் வைஷ்ணவி ஓம்"
காயத்ரி மந்திரம் :
1. ஓம் நாகவாஹினாயை வித்மஹே
சக்ரஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
2. ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்