அமித்ஷா பிரஸ்மீட் மேடையில் திடீர் Change.. டிஜிட்டல் பேனரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயர் நீக்கம்
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்புக்காக 7 இருக்கைகள் மட்டும் போடப்பட்டதால் அந்த இருக்கையில் இடம் பெறப்போகும் தலைவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தற்போது பின்னணியில் வைக்கப்பட்டிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பேனர் மாற்றப்பட்டுள்ளது. இதனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருவார்களா மாட்டார்களா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் பல்வேறு கட்சிகளும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக அதிமுக இடையான கூட்டணியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலைக்கு பதிலாக யார் தகுதியானவர் என்பது தொடர்பாக ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 3 மணி வரை ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் அடுத்த தமிழக பாஜக மாநில தலைவராக நைனார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நேற்று சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டி நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார். அங்குதான் பாஜக அதிமுக உள்ளிட்ட தலைவர்கள், நிர்வாகிகள், முகாமிட்டு அமித்ஷாவை சந்திக்க தயாராகி வருகின்றனர். ஆனால் இதுவரை அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் யாரும் அமித்ஷாவைச் சந்திக்கவில்லை. அமமுக தலைவர் டிடிவி தினகரன் உடல் நல பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கூட்டணித் தலைவர்களை அமித்ஷா சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிற்பகலில் அமித்ஷா செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர் என்று செய்திகள் வெளியாகின. மேலும் பின்னணியில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயர் இடம் பெற்றிருந்தது. மேடையில், 7 இருக்கைகள் போடப்பட்டுள்ளதால், இந்த செய்தியாளர் சந்திப்பில் இடம்பெறப் போவது அதிமுக தலைவர்களா.. பாஜக தலைவர்களா.. என்ற என கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் பேனர் மாறி விட்டது. இதனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருவது சந்தேகம் என்று கருதப்படுகிறது.