நீ மழை! (காதல் தொடர்கதை.. அத்தியாயம் 1)
- சு.தா.அறிவழகன்
அது.. சென்னையின் நெரிசலான சாலைக்கு அருகே பாம்பு போல நீண்டு நெளிந்து ஓடும் பழைய காலத்து குறுகிய தெருவின் பாதி வழியில் அமைந்துள்ள ஒரு பழைய ரோட்டோர கஃபே. வெளியே வானம் கருத்துப் போய் மழையைத் தரத் துடித்துக் கொண்டிருக்கிறது. உள்ளே ஜன்னலோர இருக்கையில் அர்ஜுன் அமர்ந்திருக்கிறான். அவனது கண்கள் வெளியே வேடிக்கை பார்த்தாலும், மனம் ஏதோ ஒரு போராட்டத்தில்தான் இருக்கிறது. எதிரே மீரா.
"சாரி அர்ஜுன்... வழியில செம டிராஃபிக். மழை வர்ற மாதிரி இருந்ததுல்ல, அதான் எல்லாரும் அவசரமா வண்டியை ஓட்டுறாங்க."
(லேசான புன்னகையுடன்) "பரவாயில்லை மீரா. ஆனா நீ வர்றதுக்கு முன்னாடியே மழை வர ஆரம்பிச்சிடுச்சு."
"எங்க? இன்னும் ஒரு சொட்டு கூட விழலையே?"
"வெளியே இல்லை மீரா... இங்கே." (தன் இதயத்தைக் காண்பிக்கிறான்) கார்மேகக் கூட்டங்கள் விண்ணை மறைக்க, காதல் மழை பூமியில் தூவ..."
"என்ன இன்னைக்கு ரொம்ப கவித்துவமா பேசற? காலேஜ் டேஸ்ல கூட இவ்வளவு 'பீல்' பண்ணி நான் உன்னைப் பார்த்ததில்லை."
"தெரியல மீரா. நாம பிரிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு. இந்த ஒரு வருஷமா நான் என்னைச் சுத்தி ஒரு பெரிய முள்வேலியைப் போட்டுக்கிட்டேன். யாரும் உள்ளே வரக்கூடாது, முக்கியமா உன் நினைவுகள் வரக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா தோத்துட்டேன்."
"முள்வேலியா? ஏன் அர்ஜுன்?"
"வலிக்கும்னு பயம் மீரா. ஆனா இன்னைக்கு இந்த மேகமும், இந்தக் காற்றும் அந்த வேலியைத் தரைமட்டமாக்கிடுச்சு. என் இதயத்தின் முள்வேலி தாண்டி, உன் நினைவுகள் உள்ளே நுழைகின்றன. அதைத் தடுக்க எனக்குத் தெரியல."
சரியாக அந்த நொடி பார்த்து கஃபே ஜன்னல் கண்ணாடியில் முதல் மழைத்துளி விழுகிறது. . சின்னத் துளி பிறகு மெல்ல மெல்ல வேகம் எடுத்து பெரு மழையாக மாறுகிறது.
"அர்ஜுன், அங்க பாரு... அந்த தெருவோர மரங்கள் எவ்வளவு அழகா மழையில நனையுதுன்னு."
"ம்ம்... தெருவோர மரங்கள் மௌனமா அந்த மழைத் துளியில் நனையுது... அதுங்க பாக்க அமைதியா இருந்தாலும், மழையோட ஒவ்வொரு சொட்டையும் அனுபவிக்குது. அதே மாதிரிதான் நானும். நீ அமைதியா உட்கார்ந்திருக்க, என் காதுகளில் உன் சிரிப்பலைகள் மட்டும் கேட்டுக்கிட்டே இருக்கு."
"நான் தான் சிரிக்கவே இல்லையே அர்ஜுன்?"
"நீ சிரிக்க வேண்டாம் மீரா. உன் மௌனம் கூட எனக்குப் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துது. இலைகளின் வழியே பாயும் மழைத்துளிபோல, என் மனதில் உன் காதல் சருகுகள் சலசலன்னு சத்தம் போட்டுக்கிட்டே இருக்கு. அந்தச் சருகுகள் காய்ந்து போயிருக்கலாம், ஆனா இந்த மழை பட்டதும் அது உயிர்த்தெழுந்துடுச்சு."
(திடீரென மெல்லிய இடி சத்தம் கேட்கிறது. மீரா லேசாக திடுக்கிடுகிறாள்.)
"அய்யோ! சத்தம் கொஞ்சம் பலமா இருக்குல்ல?"
"இந்தச் சத்தம் வானத்துல மட்டும் கேட்கல மீரா. மெல்லிய இடி சத்தம் வானில் ஒலிக்க... என் இதயம் உன் பெயரை உச்சரிக்க... ஆரம்பிச்சிடுச்சு. ஒவ்வொரு முறையும் மின்னல் வெட்டும்போதும், உன் முகம் என் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போகுது."
"டேய் என்னாச்சுடா.. கவிதையா கொட்டுது.. அர்ஜுன், நாம ஏன் பிரிஞ்சோம்னு உனக்குத் தெரியும். சூழல் அப்படி..."
"சூழல் மாறலாம் மீரா, ஆனா உண்மை மாறாது. புல்லின் நுனியில் ஒளிரும் நீர்த்துளி போல, என் கண்களில் நீயே நிஜமாகத் தெரிகிறாய். இந்த உலகமே மாயையா தெரிஞ்சாலும், என் கண்ணு முன்னாடி உட்கார்ந்திருக்கிற நீயும், உன் கண்ணுல இருக்கிற அந்த ஈரமும் தான் எனக்கு நிஜம்."
(கண்கலங்கி) "மழை அதிகமாயிடுச்சு அர்ஜுன். நாம கிளம்பலாமா? நனைஞ்சிடப் போறோம்."
"இப்ப வெளில போனாதான் நனைவோம்.. சரி.. நனையறதுல என்ன மீரா பயம்? இந்த மழை பொழிவது நீர்துளிகளல்ல, உன் காதலின் சாரல். நான் மழையில நனையணும்னு ஆசைப்படல மீரா. நான் நனைந்து கொண்டிருப்பது மழையில் அல்ல, உன் இதயத்தின் அன்பில்."
"சரி போதும் நிறுத்து.. அர்ஜுன்... இவ்வளவு தூரம் நீ என்னை இன்னும் நேசிக்கிறியா?"
"பதில் சொல்லத் தெரியலை. ஆனா ஒண்ணு மட்டும் புரியுது. இந்த மழை நின்றாலும், என் மனசுல இருக்கிற உன்னோட ஈரப்பதம் குறையாது. இது வெறும் ஆரம்பம்தான் மீரா..."
அர்ஜுன் எழுந்து வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். மீரா அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். மழை நீர்த்துளிகள் ஜன்னலில் வழிந்து கொண்டிருக்கின்றன.
எழுந்து அர்ஜூன் அருகில் சென்ற மீரா, "அன்னைக்கும் இப்படித்தான் மழை. ஞாபகம் இருக்கா? மூணு வருஷத்துக்கு முன்னாடி காலேஜ் கல்ச்சுரல்ஸ் முடிஞ்ச அன்னைக்கு..."
அர்ஜுன் லேசாகச் சிரித்தான். "எப்படி மறக்கும்? நீ பாடிட்டு இருக்கும்போதே கரண்ட் போயிடுச்சு. ஆனா நீ பயப்படாம மைக் இல்லாமயே பாடி முடிச்ச. எல்லாரும் மழையில ஓடினாங்க, ஆனா எனக்கு அங்கிருந்து நகரவே தோணல."
"ஆமா, மழையில நனைஞ்சுக்கிட்டே என்னைப் பார்த்துட்டு இருந்த. அன்னைக்கு நாம ஒருத்தருக்கு ஒருத்தர் யாருன்னே தெரியாது, ஆனா ஏதோ ஒரு நெருக்கம் தெரிஞ்சது," என்றாள் மீரா.
அர்ஜுன் மழையை வெறித்தபடி, "அன்னைக்கு உன் பாட்டைக் கேட்ட பிறகுதான் உன்னை பத்தித் தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு. அப்புறம் ஒருநாள் தியேட்டர் வாசல்ல உனக்காகக் குடையோட காத்துட்டு இருந்தேன். நீ ஓடி வந்து அந்தக் குடைக்குள்ள நின்னப்போ, அந்த நிமிஷம் அப்படியே நின்னுடாதான்னு இருந்துச்சு," என்றான்.
மீராவின் முகம் மெல்ல வாடியது. குரல் தழுதழுக்க, "அவ்வளவு நல்லா போயிட்டு இருந்த விஷயங்கள் ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல அர்ஜுன். எங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்தப்போ என்னால எதுவும் பேச முடியல. என் மௌனம் உன்னை எந்த அளவுக்கு பாதிச்சிருக்கும்னு இப்போ புரியுது," என்றாள்.
"நீ எதையும் சொல்லாம போனதுதான் எனக்குக் கஷ்டமா இருந்தது மீரா. ஆனா எவ்வளவு தூரம் தள்ளிப் போனாலும், உன்னை மறக்க முடியல," என்றான் அர்ஜுன் சுருக்கமாக.
"நான் அமெரிக்கா கிளம்பின அன்னைக்கும் மழைதான். உனக்கு மெசேஜ் பண்ணனும்னு நினைச்சேன், ஆனா உன்னை எதிர்கொள்ள எனக்குத் தைரியம் இல்லை. அங்க இருந்த ஒவ்வொரு நாளும் மழையைப் பார்க்கும்போதெல்லாம் உன்னோட ஞாபகம் தான் வந்தது," என மீரா வருத்தத்துடன் சொன்னாள்.
அர்ஜுன் அவளைத் திரும்பிப் பார்த்தான். மீரா மெல்ல தழுதழுத்த குரலில் "அர்ஜுன், இப்போ நான் நிரந்தரமா திரும்பி வந்துட்டேன்" என்றாள்.
வானில் பலத்த சப்தத்துடன் ஒரு இடி.. வானத்தை வெளிச்சமாக்கி கண்களைக் கூச வைத்தது.. காதுகளைப் பதம் பார்த்தது.
அர்ஜுன் மீராவை திரும்பிப் பார்த்து "What.. ஏன் என்னாச்சு" என்றான்.
அர்ஜுனின் கேள்விக்கு மீரா உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஜன்னலுக்கு வெளியே பெய்து கொண்டிருந்த மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மௌனம் ஏதோ ஒரு பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருப்பது போல் இருந்தது.
"திடீர்னு அமெரிக்காவுல இருந்து திரும்பி வந்துட்டேன்னு சொல்ற? வேலை, ஃபேமிலி எல்லாம்..?" அர்ஜுன் மீண்டும் கேட்டான்.
மீரா தன் கையில் இருந்த காபி கப்பை இறுகப் பற்றிக் கொண்டாள். "எல்லாம் முடிஞ்சுடுச்சு அர்ஜுன். அப்பா பார்த்த அந்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்கல. அமெரிக்கா போன மூணாவது மாசமே அந்த சம்பந்தம் நின்னுடுச்சு."
அர்ஜுன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான். "சம்பந்தம் நின்னுடுச்சா? ஆனா நீ அங்க போனதே அதுக்காகத்தானே? ஏன்?"
மீரா ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு அவனிடம் உண்மையைச் சொல்லத் தொடங்கினாள். "அங்கே போய் அவரைப் பார்த்தப்போதான் தெரிஞ்சது, அவருக்கும் எனக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாதுன்னு. அவருக்கு எல்லாமே ஒரு பிசினஸ் கணக்கு மாதிரிதான் இருந்தது. என் விருப்பம், என் உணர்வுகள் எதுவுமே அங்கே மதிக்கப்படல. அப்பாவுக்காக ஆரம்பத்துல சகிச்சுக்கிட்டேன். ஆனா ஒரு கட்டத்துல, உன்னை விட்டுட்டு வந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிய ஆரம்பிச்சது."
அர்ஜுன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையில் கோபமா அல்லது ஆறுதலா என்று அவளால் கணிக்க முடியவில்லை.
"அப்பா கிட்ட சண்டை போட்டு அந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தினேன்," என்று தொடர்ந்தாள் மீரா. "அதுக்கப்புறம் அங்கேயே ஒரு கம்பெனியில வேலை கிடைச்சது. அப்பா என் மேல ரொம்ப கோபமா இருந்தாரு. அவரோட கோபம் தணியட்டும்னு தான் இந்த ஒரு வருஷம் அங்கேயே இருந்தேன். ஆனா, ஒரு நிமிஷம் கூட உன் ஞாபகம் இல்லாம என்னால இருக்க முடியல அர்ஜுன்."
"அப்போ ஏன் எனக்கு ஒரு போன் கூட பண்ணல? ஒரு மெசேஜ் பண்ணியிருக்கலாம்ல?" அர்ஜுனின் குரலில் ஓராண்டு காலத் தவிப்பு வெளிப்பட்டது.
"எந்த முகத்தை வச்சுக்கிட்டு உனக்கு போன் பண்றதுன்னு தெரியல. உன்னை அவ்வளவு தூரம் காயப்படுத்திட்டு, 'சாரி, நான் தப்பு பண்ணிட்டேன்'னு சொல்றது ரொம்ப சாதாரணமான விஷயமா தோணுச்சு. நேரடியா வந்து உன்னைப் பார்க்கணும், நீ என்னை மன்னிச்சாலும் சரி, திட்டினாலும் சரி... ஆனா உன் முன்னாடி நிற்கணும்னு நினைச்சேன். அதான் கிளம்பி சென்னைக்கே வந்துட்டேன்."
அர்ஜுன் வெறிச்சிட்ட பார்வையுடன், "மீரா, இந்த ஒரு வருஷத்துல நான் நிறைய மாறிட்டேன். ஆரம்பத்துல உன் மேல கோபம் இருந்தது உண்மைதான். ஆனா போகப் போக, அந்த இடத்துல ஒரு பெரிய வெறுமைதான் மிஞ்சியது. நீ திரும்பி வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை."
"இப்போ நான் வந்துட்டேன் அர்ஜுன். பழையபடி நாம இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பியா?"
(தொடரும்)