என் கூட நீ இல்லையே.. (நீ மழை..2)

Su.tha Arivalagan
Feb 09, 2026,10:06 AM IST

- சு.தா. அறிவழகன்


அர்ஜுனின் கண்கள் இப்போது மீராவின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தன. அந்தப் பார்வையில் ஒருவிதமான பாரமும், அதே சமயம் சொல்லத் துடிக்கும் ஏதோ ஒரு ரகசியமும் கலந்திருந்தது.


"வாய்ப்பா?" அர்ஜுன் கசப்புடன் சிரித்தான். "வாய்ப்புகள் கேட்குறதுக்கு நல்லா இருக்கும் மீரா. ஆனா கடந்து போன காலத்தை யாராலயும் திருப்பிக் கொண்டு வர முடியாது. நீ அங்க அமெரிக்காவுல ஒரு வருஷம் உன்னோட போராட்டத்துல இருந்த... ஆனா நான் இங்க ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து பிழைச்சிருக்கேன்."


கஃபே-வின் வாசலில் தேங்கி நின்ற மழைநீரைப் பார்த்தான் அர்ஜூன். கண்ணாடிச் சுவரில் வழியும் நீர்த்துளிகள் மீராவின் பிம்பத்தை சிதைத்துக் காட்டின. "அந்தப் பழைய அர்ஜுன் இப்போ இல்லை மீரா. நீ போன அப்புறம், என் வீட்ல நிறைய விஷயங்கள் மாறிடுச்சு. நான் இப்போ சும்மா சுத்திட்டு இருந்த அந்த பழைய காலேஜ் பையன் இல்லை. கவிதையும் காதலும் மட்டுமே வாழ்க்கைன்னு நினைச்ச அந்த அர்ஜுன் அன்னைக்கே இறந்துட்டான்."


மீரா குழப்பத்துடன், "என்ன சொல்ற அர்ஜுன்? வீட்ல ஏதும் பிரச்சனையா? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?" என்று மெல்ல அவன் தோளைத் தொட வந்தாள். அவள் விரல்கள் அவன் சட்டையைத் தீண்டும் முன்னே, அர்ஜுன் மெல்ல நகர்ந்து கொண்டான். அந்தத் தவிர்ப்பு மீராவின் இதயத்தில் ஒரு கூர்மையான ஊசியைச் செலுத்தியது போலிருந்தது.


"அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ நான் தனியா தான் இருந்தேன் மீரா," அர்ஜுனின் குரல் இப்போது தழுதழுத்தது. "நடுராத்திரி ஹாஸ்பிடல் வாசல்ல நின்னுட்டு, கையில காசு இல்லாம, யாரைக் கூப்பிடறதுன்னு தெரியாம தவிச்சப்போ... உன் நம்பருக்கு கால் பண்ணினேன். ஆனா நீ அங்க ஏதோ முக்கியமான பிரசன்டேஷன்ல இருந்தே. அப்புறம் பேசுறேன்னு நீ அனுப்பிச்ச அந்த ஒரு மெசேஜ்... அது என் வாழ்க்கையையே மாத்திருச்சு. ஹாஸ்பிடல் செலவு, அம்மாவோட தவிப்பு, வீட்டை அடமானம் வச்சது... எல்லாத்தையும் நான் ஒருத்தனா தான் பார்த்தேன். அப்போ எனக்கு ஒரு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை.. குறிப்பா நீ என் கூட இல்லை."


அவன் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டுத் தொடர்ந்தான், "நீ கேட்ட அந்த மௌனம், என்னை ஒரு பொறுப்பான மனுஷனா மாத்திருச்சு. இன்னைக்கு நான் ஒரு கம்பெனில மேனேஜர், கடன்களை அடைச்சவன். ஆனா அந்த மாற்றத்துல என் மனசுல இருந்த ஈரப்பதம் எல்லாம் காஞ்சு போயிடுச்சு. ஒரு பாறையைப் போல மாறிட்டேன் மீரா."




மீராவின் கண்கள் கலங்கி, கண்ணீர் கன்னங்களில் வழியத் தொடங்கியது. "சாரி அர்ஜுன்... எனக்கு இதெல்லாம் தெரியாது. நான் என்னோட பிஸியான லைஃப்ல, நீ இங்க இவ்வளவு கஷ்டப்படுவேன்னு நினைக்கல. நான் ரொம்ப சுயநலமா இருந்துட்டேனோன்னு இப்போ தோணுது. தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடு."


"நிச்சயம் சுயநலம்னு சொல்ல மாட்டேன். உனக்கான வாழ்க்கையை நீ தேடிக்கிட்டே. அதுல தப்பில்லை. ஆனா வாழ்க்கை நம்ம நினைச்சபடி ஓடுறது இல்லையே.." என்ற அர்ஜுன், சட்டென்று தன் மொபைலை எடுத்து நேரத்தைப் பார்த்தான். "சரி, ரொம்ப நேரமாச்சு. நான் கிளம்பணும். வீட்டுல அப்பா வெயிட் பண்ணுவாங்க. அவருக்கு இப்போ மருந்து கொடுக்கிற நேரம்."


மீரா பதற்றமானாள். "அப்போ... இதுதான் கடைசி சந்திப்பா அர்ஜுன்? நாம மறுபடியும் பேசவே மாட்டோமா?"


அர்ஜுன் பதில் சொல்லவில்லை. அமைதியாக கஃபே வாசலை விட்டு மழையில் இறங்கினான். குடை கூட இல்லாமல் அவனது தோள்கள் நனையத் தொடங்கின. அந்த மழையில் அவனது உருவம் மெல்ல மங்கலாகத் தெரிந்தது. மீராவைத் திரும்பிப் பார்க்காமலேயே சொன்னான்:


"நாளைக்கு சாயங்காலம் இதே இடத்துக்கு வா. உனக்கு ஒருத்தரை அறிமுகப்படுத்தணும். அவங்களைப் பார்த்த பிறகு, நீ கேட்ட அந்த வாய்ப்புக்கான பதில் உனக்கே தெரிஞ்சிடும்."


"யாரை அறிமுகப்படுத்தப் போறே அர்ஜுன்?... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" என்று குரல் நடுங்க மீரா உரக்கக் கேட்டாள். அவள் குரல் மழையின் இரைச்சலில் கரைந்தது.


அர்ஜுன் பதில் சொல்லவில்லை. மழையின் வேகத்திற்கு இணையாக அவன் நடை இருந்தது. அவனது காலடி ஓசை மெல்ல மறைந்தது. 


மீரா மட்டும் கஃபே வாசலில் திகைத்து நின்று கொண்டிருந்தாள். அர்ஜுன் என்ன சொல்லிட்டுப் போறான்.. யாரை அறிமுகப்படுத்தப் போறேன்னு சொல்றான்.. அவனது வாழ்வில் வேறு யாராவது வந்துவிட்டார்களா? மனசெல்லாம் படபடக்க குழப்பமானாள் மீரா.


மூச்சு வேகமாக வாங்கியது. மழை மீண்டும் வேகம் எடுக்க, மீராவின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் மின்னலாய் வெட்டின.. அது வான் மின்னலை விட படு வேகத்தில் தடதடத்தது. காற்று பலமாக வீச, கஃபேயின் பெயர் பலகை தடதடவென ஆடி சத்தமிட்டது. தலை லேசாக சுற்றுவது போல இருந்தது. உலகமே தன்னைச் சுற்றிச் சுழல்வது போன்ற உணர்வில், அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்தாள் மீரா. நாளை மாலை வரை காத்திருப்பது என்பது அவளுக்கு ஒரு யுகமாகத் தோன்றியது.


கைப்பையில் இருந்த செல்போன் ஒலித்தது.. தடுமாற்றத்துடன் எடுத்து காதில் ஒற்றினாள்.


"ஹலோ?"


(தொடரும்)