நேர்காணல்

Su.tha Arivalagan
Feb 20, 2026,03:53 PM IST

- ஷீலா ராஜன்


மாலை நேரம்.. கோயில் வாசலுக்கு வெளியே இருக்கும் பூக்கடை ரொம்ப கூட்டம். “மல்லி எவ்வளவு?”ன்னு ஒரு வயதான அம்மா கேட்டாங்க.


“இருபது ரூபா அம்மா,”ன்னு கடைக்காரி சொன்னாள்.


அந்த அம்மா பையைத் திறந்து பார்த்தாங்க. 




“அய்யோ… சில்லறை இல்லையே… நான் போன் கூட எடுத்துக்கிட்டு வரல. பரவாயில்ல, அடுத்த தடவை வாங்கிக்கறேன்,”ன்னு திரும்பப் போறாங்க.


அதை பார்த்து அங்க நின்றிருந்த ஒரு இளம்பெண் உடனே, “அம்மா, நான் குடுக்கிறேன். நீங்க வாங்கிக்கோங்க,”ன்னு சொன்னாள்.


“ஐயோ வேண்டாம்மா! நீ படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கே… உன் கிட்ட காசு இருக்காது,”ன்னு அந்த அம்மா தயங்கினாங்க.


“பரவாயில்ல அம்மா. எங்க அம்மா எப்பவும் சொல்வாங்க… ‘பூவுக்கு கணக்கு பார்க்கக் கூடாது’ன்னு. நீங்க சாமிக்குப் போடப் போறீங்க இல்ல… இதை வாங்கிக்கோங்க,”ன்னு அவள் சிரிச்சுக்கிட்டே ரூபாய் நோட்டைக் கொடுத்தாள்.


அந்த அம்மா அவளை கவனமா பார்த்தாங்க. “என்ன படிச்சிருக்க? வீடு எங்க? அம்மா அப்பா என்ன பண்ணுறாங்க?”ன்னு அடுக்கடுக்கா கேள்வி.


அவளும் அமைதியா எல்லாம் சொன்னாள். “கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கேன் அம்மா. வேலை தேடிக்கிட்டு இருக்கேன்.”


“அப்போ இப்போ வேலை இல்லையா?”


“இல்ல அம்மா… இன்னும் கிடைக்கல. ஆனா கம்ப்யூட்டர்ல வேலை பாக்க ரொம்ப பிடிக்கும். மணிக்கணக்கா உட்கார்ந்தே பண்ணுவேன். வீட்டுல வேலை இருக்கும்… இருந்தாலும் எனக்கு கம்ப்யூட்டர்தான் ரொம்ப புடிக்கும்,”ன்னு அவள் கண்களில் ஒரு ஆசை தெரிஞ்சது.


அந்த அம்மா சிரிச்சாங்க. “உன் போன் நம்பர் குடு. எனக்கு கம்ப்யூட்டர்ல ஆபரேட் பண்ண தெரியாது. ஏதாவது சந்தேகம் வந்தா உன்னை கூப்பிடறேன்.”


“கண்டிப்பா அம்மா. எப்போ வேண்டுமானாலும் கால் பண்ணுங்க,”ன்னு அவள் நம்பிக்கையோடு சொன்னாள்.


“சரி மா… இந்த கடவுள் உன்னை கைவிட மாட்டார்,”ன்னு ஆசீர்வாதம் சொல்லி அந்த அம்மா போயிட்டாங்க.


---


இரண்டு நாள் கழிச்சு… அவள் வீட்டுக்கு ஒரு தபால்.


“நேர்காணல் முடிந்தது. நீங்கள் வேலையில் சேரலாம்.”


அவளுக்கு அதிர்ச்சி. “நேர்காணல்? எப்போ நடந்தது?”ன்னு மனசுல சந்தேகம்.


அந்த முகவரிக்கு போனாள். பெரிய ஆபீஸ். உள்ளே நுழைந்ததும் அவள் கண்கள் பெரியதாயிற்று.


கோயில் வாசலில் பூ வாங்கின அந்த அம்மாதான் அங்க மேனேஜிங் டைரக்டர்!


அவள் வியப்பில் நின்றுட்டாள்.


அந்த அம்மா சிரிச்சுக்கிட்டு, “உள்ளே வா மா. எனக்கு ஒரு அசிஸ்டன்ட் தேவை. நல்ல மனசு இருக்குறவங்க கூட வேலை பண்ணணும். உனக்கு சந்தோஷமா?”ன்னு கேட்டாங்க.


அவளுக்கு வார்த்தையே வரல. கண்களில் நீர். “ரொம்ப சந்தோஷம் அம்மா…”


“அந்த நாளே உன் நேர்காணல் முடிஞ்சுடுச்சு மா,”ன்னு அந்த அம்மா மெதுவா சொன்னாங்க. “உன் மனசு தான் எனக்கு முக்கியம்.”


அந்த நிமிஷம் அவளுக்கு புரிஞ்சது — சில நேர்காணல்கள் கேள்வி பதில் இல்லாமல் நடக்குது… நம்ம மனசு பேசுற இடத்தில்தான் உண்மையான தேர்வு.


அந்த நாள் கோயிலில் கொடுத்த இருபது ரூபா… அவள் வாழ்க்கையையே மாற்றிட்டது.