சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
சென்னை : 2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமையப் போகிறது. முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ், பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த ஆண்டில் தான் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் முதல் வளர்ந்து வரும் கலைஞர்களின் படைப்புகள் வரை பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் நடிகர் சூர்யாவின் இரண்டு பெரிய படங்கள் இடம்பிடித்துள்ளன. வெங்கீ அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 46-வது படம் மற்றும் 'ஆவேசம்' பட புகழ் ஜித்து மாதவன் இயக்கத்தில் நஸ்ரியாவுடன் சூர்யா இணையும் 47-வது படம் ஆகியவை இதில் முக்கியமானவை. அதேபோல், நடிகர் தனுஷின் 54-வது படமான 'காரா' (இயக்கம்: விக்னேஷ் ராஜா) மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் 55-வது படத்தின் டிஜிட்டல் உரிமையையும் நெட்ஃபிக்ஸ் பெற்றுள்ளது.
முக்கியமான பிற திரைப்படங்கள்:
- மார்ஷல் (Marshal): கார்த்தி நடிப்பில் 'தமிழ்' இயக்கத்தில் உருவாகும் அதிரடித் திரைப்படம்.
- இதயம் முரளி (Idhayam Murali): அதர்வா நடிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் படம். இதில் இசையமைப்பாளர் தமன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்கிறார்.
- கட்டா குஸ்தி 2: விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்.
- ஏஜிஎஸ் 28: அர்ஜுன் மற்றும் அபிராமி மீண்டும் இணையும் ஆக்ஷன் த்ரில்லர்.
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் 'அன் ஆர்டினரி மேன்' (An Ordinary Man), கார்த்திக் யோகி இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் காமெடி படம், மற்றும் பிரபலமான யூடியூப் கலைஞர் வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் 'தாயங்காரம்' ஆகிய படங்களும் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளன. மேலும், சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் 'வித் லவ்' (With Love) என்ற படமும் இந்தப் பட்டியலில் உள்ளது.
திரையரங்குகளில் வெளியான பிறகு இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் நெட்ஃபிக்ஸ் தளத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும். இந்த மெகா கூட்டணி தமிழ் சினிமாவின் வியாபார எல்லையை உலகளவில் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீஸ் தேதி அறிவிக்காத, படத்திற்கு டைட்டில் கூட வைப்பதற்கு முன்பே அந்த படங்களின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.