சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

Su.tha Arivalagan
Feb 22, 2025,07:07 PM IST

பெய்ஜிங்: சீனாவில் வவ்வாலிலிருந்து பரவும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வுஹான் ஆய்வகத்தில்தான் இந்த வைரஸும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் மீண்டும் ஒரு பெருந்தொற்று ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.


ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனாவைரஸும் இதே வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்பது நினைவிருக்கலாம். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வைரஸும், பழைய கொரோனாவைரஸ் போலவே பரவும் தன்மை கொண்டதாக  இருக்கிறதாம்.




இந்த ஆய்வினை, மிகவும் சர்ச்சைக்குரிய வுஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆய்வகத்தைச் சேர்ந்த ஷி ஜெங்லி எனப்படும் பெண் ஆய்வாளர் தலைமையிலான குழு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. புதிய வைரஸானது ஹாங்காங் நகரில் கண்டறியப்பட்ட ஜப்பானிய பிபிஸ்ட்ரெல் (Japanese Pipistrelle) எனப்படும் HKU5 வைரஸின் புதிய மரபியல் பிரிவைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.


இந்த வைரஸ், மெர்பேகோவிரஸ் (Merbecovirus) எனும் துணை இனத்தைச் சேர்ந்ததாகும். இது, மத்திய கிழக்கு மூச்சுத் தொற்று நோயை (Middle East Respiratory Syndrome - MERS) ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.


புதிய வைரஸ் கண்டுபிடிப்பு குறித்து ஷி ஜெங்லி மேலும் கூறுகையில்,  HKU5-CoV வைரஸின் புதிய மரபியல் வகையை (Lineage 2) நாங்கள் கண்டறிந்துள்ளோம். இது வவ்வாலில்தான் முதலில் கண்டறியப்பட்டது. ஆய்வின்போதுதான் இது மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டிருப்பது தெரிய வந்தது என்றார்.


புதிய ஆய்வு முடிவுகள் மீண்டும் ஒரு கொரோனா பரவலை ஏற்படுத்துமா என்ற அச்சத்தையும், கவலையயும உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் புதிய வகை வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்த அறிவுறுத்தலையும் வெலியிடவில்லை.