டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

Su.tha Arivalagan
Jun 10, 2025,01:47 PM IST

கோவை: டிமார்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆப் என்ற பெயரில் போலியான ஆப்பை டவுன்லோடு செய்யச் சொல்லி,  பணம் பறிக்கும் கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இணையதள மோசடிகள் இன்று தலைவிரித்தாடி வருகின்றன. அதிலும் எல்லாப் பணப் பரிவர்த்தனைகளும் இன்று இணைய வெளியில் நடப்பதால் பல்வேறு வகையான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது புகழ் பெற்ற நிறுவனங்களின் இணையதளம் போல போலியாக செட்டப் செய்து, அதன் மூலம் பணம் பறிக்கும் ஒரு செயல் அரங்கேறி வருவது தெரிய வந்துள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபல டி மார்ட் நிறுவனத்தின் இணையதளம் போலவே போலியான வெப்சைட்டை உருவாக்கி அதன் மூலம் பல லட்சம் பணத்தை மோசடியாக பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். தற்போது அதேபோன்ற இன்னொரு மோசடி நடந்து வருகிறதாம்.


கோவையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் டிமார்ட் நிறுவனத்தில் பொருள் வாங்குவதற்காக அதன் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பர்ச்சேஸ் ஆர்டர் செய்துள்ளார். அப்போது, அவரது செல்போன் எண்ணுக்கு உங்களது ஆர்டர் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. உடனடியாக எங்களது ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள் என்று கூறி ஒரு APK பைலை அனுப்பியுள்ளனர்.  அத்தோடு தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு பேசி ஆப்பை டவுன்லோடு செய்யச் சொல்லியுள்ளனர். ஓடிபியும் சொல்லக் கூறியுள்ளனர்.




முதலில் அவருக்கு எதற்காக ஆப்பை டவுன்லோடு செய்து ஓடிபி கொடுக்கச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. சந்தேகமடைந்த அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது, அப்படியெல்லாம் நாங்கள் அனுப்ப மாட்டோம் என்ற பதில் வந்துள்ளது. இதையடுத்தே, தான் அணுகிய இணையதளம் போலியானது என்று அவர் உணர்ந்துள்ளார்.


அந்த வாடிக்கையாளர் சுதாரித்துக் கொண்டதால் மிகப் பெரிய மோசடியிலிருந்து தப்பியுள்ளார். கொஞ்சம் அசந்திருந்தால் அவரது செல்போனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு மோசடியாளர்களின் கைக்குப் போயிருக்கும். 


மக்களே உஷாரா இருங்க.. எந்த வர்த்தக இணையதளத்தைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் நன்றாக ஆய்ந்து பிறகு அதைப் பயன்படுத்தப்பாருங்கள். குறிப்பாக ஆப் பயன்படுத்தும்போது மிக மிக கவனமாக இருங்கள். ஒரிஜினல் நிறுவனத்தின் பெயரில் பல போலியான ஆப்கள் இருக்கின்றன. அதுகுறித்துக் கவனமாக இருப்பது நல்லது.