பெண்களின் பாதுகாப்பிற்காக... இளஞ்சிவப்பு ரோந்து வானங்கள் சேவை தொடக்கம்!
சென்னை: காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 80 இளஞ்சிவப்பு நோந்து வாகனங்களின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.11.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கட்டுதல், பாதுகாப்பு பணிகளுக்காக வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 2025-2026ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் 12 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு, அவ்வாகனங்களின் பயன்பாட்டினை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்.
இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள், தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிக்கவனம் செலுத்த ஈடுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.