திமுக கூட்டணியில் இணைகிறாரா ராமதாஸ்? உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிபந்தனை?

Su.tha Arivalagan
Jan 17, 2026,10:30 AM IST

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநில அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.


பாமகவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து, தற்போது கட்சியே இரண்டு அணிகளாக உள்ளது. அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்கனவே இணைந்துள்ளது.  அதிமுக உடன் கூட்டணி வைக்கலாமா என ராமதாஸ் யோசித்துக் கொண்டிருந்த போது அன்புமணி சென்று கூட்டணியை அறிவித்ததால், ராமதாஸ் தரப்பு திமுகவை நோக்கி காய் நகர்த்தி வருகிறது. சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், "தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி சிறப்பாக உள்ளது" என்று ராமதாஸ் பாராட்டியது இந்த யூகங்களுக்கு வலு சேர்த்துள்ளது.




இதனால் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைய போகிறார் என்ற செய்திகள் பரவின. உடனடியாக, நான் என்டிஏ கூட்டணியில் இருந்து எப்போது விலகினேன்? என கூறினார் ராமதாஸ். இதனால் இவர் யார் பக்கம் செல்ல உள்ளார் என்பது தற்போது வரை புதிராகவே உள்ளது. இதற்கிடையில் திமுக உடன் பாமக ராமதாஸ் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. 


கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ராமதாஸ் தரப்பிடம் திமுக முக்கிய நிபந்தனை ஒன்றை வைத்துள்ளதாம். அதாவது, மதிமுக உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளைப் போலவே, ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களையும் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட திமுக தலைமை வலியுறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால், பாமகவின் பாரம்பரிய 'மாம்பழம்' சின்னம் தற்போது அன்புமணி தரப்பிற்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், ராமதாஸ் தரப்பு தனிச் சின்னத்தில் போட்டியிடவே விரும்புவதாகக் கூறப்படுகிறது.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள நிலையில், ராமதாஸின் வருகை கூட்டணியில் சில சலசலப்புகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று ராமதாஸ் சூசகமாகத் தெரிவித்துள்ளதால், வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.இந்த கூட்டணி உறுதியானால், வட தமிழகத்தின் தேர்தல் களம் பெரும் மாற்றத்தைச் சந்திக்கும் என்பது உறுதி.