கவிதாயினியின் இரவுகள்!
- இரா.மும்தாஜ் பேகம்
பாட்டி பொட்டு வைத்தாள்
பால் நிலவே உன்னை கண்டு.
பாங்காய் தோசை சுட்டாள்
அம்மாவும் உன்னைக் கண்டு.
பல்லாங்குழி விளையாடும்போதும்
பார்த்தேனே உன் வடிவம்.
இரவில் நடந்த போது என்னுடனே நீ வந்தாய்.
ஈறேழு நாட்களிலே
எங்கேயோ சென்றுவிட்டாய்,
தேடி அலைந்தேன் நான்.
தெரியவில்லை கண்களுக்கு
பதுங்கி, வெளியில் வந்தாய், பாட்டிமைக்கு மறுநாளே, பிறையாக....
ஓ நிலா பெண்ணே!
நடைப்பயிற்சி வந்தபோது
நான் ரசித்தேன் உன்னை.
இப்பொழுதும் சலிக்காமல் பார்க்கிறேன்.
ஜன்னல் வழியாக
தென்னங்கீற்று போல்
வளர்பிறையாய் வந்திருக்கிறாய்.
நான் ரசிக்கிறேன் என்றதும், பூரிப்பில்..… பருத்து,பருத்து
பௌர்ணமி ஆனாய்.
என்னே!உன் அழகு
உன்னைக் கண்டு, நானும் பருத்தேன். சகிக்கவில்லை,
அதெப்படி ஒரே மாதத்தில் ஒல்லியாகிப் போனாய்.
உன் தேகத்திற்கு,
வளர் பிறையும் அழகுதான்.
தேய் பிறையும் அழகுதான்.
தேய்பிறை மட்டுமே
என் தேகத்திற்கு அழகு.
தெரிந்து கொண்டேன் உன்னைக் கண்டு.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)