20 வது ஆண்டாக நிதிஷ் ஆட்சி.. பத்தாவது முறையாக பதவியேற்பு.. சாதித்தார் நிதீஷ் குமார்
- சகோ. வினோத்குமார்
பாட்னா: பீகார் மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்று சாதனை படைத்துள்ளார் நிதீஷ் குமார். அவரது ஆட்சி அங்கு 20 வது வருடமாக நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பத்தாவது முறையாக இன்று பதவியேற்றார். முதலமைச்சர் பதவியேற்பு விழா பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் விமர்சையாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பீகார் சட்டசபை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 66.91 சதவீதம்
வாக்குகள் பதிவானது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
இதில் பாஜக 89 இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து பீகாரில் முதல்வர் மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சுக்கள் எழுந்தன. பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இதை பாஜக மறுத்து விட்டது. நிதீஷ் குமாரே முதல்வராக நீடிப்பார் என்ற விளக்கம் வெளியானது.
இதையடுத்து நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் சட்டசபை கூட்டணித் தலைவராக நிதீஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகாரின் முதல் அமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று பீகாரில் உள்ள பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் நிதீஷ் குமார் முதலமைச்சர் ஆக பத்தாவது முறையாக பதவி ஏற்றார். இதன்மூலம் பீகாரில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்து வரும் நிதீஷ் குமார் தன் முதல்வர் பதவியை தக்க வைத்துள்ளார்.
இந்தியாவில் அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியை வகித்தவர்கள் பட்டியலில் முன்னாள் திரிபுரா முதல்வர் மானிக் சர்காரின் சாதனையை முறியடித்துள்ளார் நிதீஷ் குமார். அவருக்கு முன்பு, வீரபத்ர சிங், லால் தன்வாலா, கெகாங் அபாங், ஜோதிபாசு, நவீன் பட்நாயக், பவன் குமார் சாம்லிங் ஆகியோர் உள்ளனர். மறைந்த தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதியின் சாதனையை முறியடித்திருந்த நிதீஷ்குமார் தற்போது மானிக் சர்காரைத் தாண்டிச் சென்றுள்ளார். இந்தியாவிலேயே அதிக வருடம் முதல்வராக இருந்த புதிய சாதனையை அவர் படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதற்கு அவருக்கு இன்னும் 4 வருடங்கள் தேவை.
(ச.கோ. வினோத்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)