74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

Su.tha Arivalagan
Nov 15, 2025,12:05 PM IST

பாட்னா: தனது74 வயதிலும் செமத்தியான டப் கொடுத்துள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். தான் கரையேறியது மட்டுமல்லாமல், தன்னை நம்பி வந்த பாஜகவையும் தூக்கி உயரத்தில் உட்கார வைத்து விட்டார். உண்மையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது நிதீஷ் குமாரின் பயணம்.


பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, நிதீஷ் குமாரின் அரசியல் திறமைக்கும், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்றாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


தேர்தல் முடிவுகள் வெளியானதும், பாட்னா மற்றும் பிற நகரங்களில் JDU தொண்டர்கள், "பீகாரின் ஒரே நட்சத்திரம், நிதீஷ் குமார்" என்று கோஷமிட்டனர். இது, அவருக்கு எதிரான கருத்துக்கள் பரவிய நிலையிலும், அவர் எப்படி ஒரு அலை அலையாக ஆதரவைப் பெற்றார் என்பதை உணர்த்தியது.


கேலி கிண்டல்களைப் புறம் தள்ளியவர்




74 வயதான நிதீஷ் குமார் சமீப காலமாக பல்வேறு கேலி கிண்டல்களுக்கு ஆளானவர். அதிலும் குறிப்பாக பாஜகவுடன் கை கோர்த்த பிறகுதான் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. அவரது உடல் நிலை குறித்து கேலி செய்யப்பட்டது. அவரது செயல்பாடுகள் சர்ச்சையாகின. அவர் மீதான நல்ல பெயர் போய் விட்டதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரமே செய்தன. ஆனாலும் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. இதோ.. மீண்டும் ஒருமுறை தனது செல்வாக்கினை செயல்பாட்டின் மூலமாக நிரூபித்துள்ளார் நிதீஷ் குமார்.

 

பல ஆண்டுகளாக அவர் உருவாக்கிய விசுவாசமான வாக்காளர்களின் ஆதரவுடன், அவர் 10வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். 2020 தேர்தலில் 43 இடங்களை வென்ற JDU, இந்த முறை 85 இடங்களை அள்ளியிருக்கிறது. இது மிகப் பெரிய சாதனைதாந். நிதீஷ் குமார் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், தனது வாக்குகளை மாற்றும் திறனைக் காட்டுகிறது. அவர் பலமுறை கட்சியை மாற்றினாலும், அவரது வாக்காளர்கள் நீங்கள் எங்கு செல்கிறீர்களோ, நாங்கள் அங்கு செல்கிறோம் என்ற செய்தியை தெளிவாக தெரிவித்துள்ளனர். இதுதான் ஒரு தலைவருக்கான சரியான அடையாளம். அவரை நம்பி ஒரு படையையே உருவாக்கி வைத்துள்ளார் நிதீஷ் குமார்.


லாலு பிரசாத் யாதவ் காலத்து அரசியல் தலைவர் நிதீஷ் குமார். எத்தனையோ அரசியல் ஜாம்பவான்களை இருவருமே பார்த்துள்ளனர். இருவருமே சந்திக்காத வெற்றி கிடையாது, சவால்கள் கிடையாது.. எல்லாவற்றையும் வென்றவர்கள் இந்த இருவருமே. இப்போது லாலு பிரசாத் யாதவ் ஓய்ந்து போய் விட்டார். அவரது மகன் தேஜஸ்வி யாதவ்தான் அரசியல் லகானை இந்த முறை கையில் எடுத்து தேர்தலைச் சந்தித்தார். ஆனால் தனது தந்தை வயது ஒத்தவரிடம் வீழ்ந்து போயிருக்கிறார் இளம் ரத்தமான தேஜஸ்வி யாதவ். இது மிகப் பெரிய மெசேஜை நாடு முழுவதும் கொண்டு போயிருக்கிறது.


வாய்ப் பேச்சு போதாது.. செயல்பாடு முக்கியம்




வெறும் வாயை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. செயல்பாடுதான் முக்கியம், களம் முக்கியம், களத்தில் நாம் எப்படி வலுவாக காலூன்றி இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதை நிதீஷ்குமார் நிரூபித்திருக்கிறார். தேஜஸ்வி யாதவ் தான் அடுத்த முதல்வர் என்று பல கருத்துக் கணிப்புகள் கூறிய போதிலும் கூட எல்லாவற்றையும் புறம் தள்ளி விட்டு நிதீஷ்குமாரை தேர்வு செய்துள்ளனர் வாக்காளர்கள். இது கவனிக்கத்தக்கது.


இதுபோன்ற வாக்கு மாற்றும் திறமை லாலு பிரசாத், மாயாவதி, முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் சிராக் பாஸ்வான் போன்றவர்களிடமும் உள்ளது. ஆனால், நிதீஷ் குமாரை தனித்துவமாக்குவது என்னவென்றால், அவர் தனக்கு ஆதரவான அனைத்து சாதிப் பிரிவினரிடமும் செல்வாக்கை வைத்துள்ளார். நிதீஷ் யாருடன் இருக்கிறாரோ, அவரே வெற்றி பெறுவார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மேலும் பாஜகவையும் சேர்த்து அவர் கரை சேர்த்துள்ளார். பாஜகவுக்கு தனி அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


தேர்தலுக்கு முன்பு, முதல்வராக இருந்த நிதீஷ் குமார் ஒரு சுமையாகக் கருதப்பட்டார். அவரது உடல்நிலை சரியில்லாதது, சில சமயங்களில் அவர் பேசிய கருத்துக்கள், அவருக்கு எதிரான மனநிலையை உருவாக்கியதாகக் கூறப்பட்டது. எதிர்க்கட்சிகள், விமர்சகர்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் NDA கூட்டணியில் இருந்த சிலரின் விமர்சனங்கள் கூட, நிதீஷ் குமாரின் ஆதரவாளர்களை ஒன்று திரட்டி, அவருக்குப் பின்னால் நிற்க வைத்தன.


நிதீஷ் குமார், "மிஸ்டர் கிளீன்" ஆகவும் அறியப்படுகிறார். அவரது அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், நிதீஷ் குமார் மீது இதுவரை யாரும் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தவில்லை. ஒரு புகார் கூட அவர் மீது கிடையாது.. அந்த அளவுக்கு மனிதர் வெளிப்படையானவர். அதுதான் அவரது இமேஜை கொஞ்சம் கூட சரிவடையாமல் தூக்கிப் பிடிதித்திருக்கிறது. லாலு பிரசாத் போல, நிதீஷ் குமார் குடும்ப அரசியல் செய்யவில்லை. 


வசனம் கிடையாது.. எதார்த்தமான பேச்சு



லாலு-ராப்ரி ஆட்சிக்குப் பிறகு, பீகாரை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தது நிதீஷ்தான். அவரது ஆட்சி மற்றும் கொள்கைகள் பரவலாகப் பாராட்டப்படுகின்றன. மின்சாரம் தடையின்றி கிடைப்பது (இப்போது பெரும்பாலான மக்களுக்கு இலவசம்), சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளின் மேம்பாடு, மற்றும் சட்டம் ஒழுங்கு மேம்பாடு ஆகியவை அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளன. இதையெல்லாம் தாண்டி எதிர்க்கட்சிகளால் நிதீஷைத் தொட முடியவில்லை என்பதே உண்மையாகும்.


இதில் வேடிக்கை என்னவென்றால் ஜாதி அரசியல் கொடி கட்டிப் பறக்கும் பீகாரில், நிதீஷ் குமாரின் சொந்த சாதியான குர்மிகள், எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆனால், இது அவருக்கு ஒரு தடையாக இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBC), யாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்டோர் (non-Yadav OBC) மற்றும் பெண்கள் ஆகியோரின் ஆதரவை அவர் வலுவாக உருவாக்கி வைத்துள்ளார்.  இது அவரது அரசியல் மேதைமையை காட்டுகிறது. உயர் சாதியினரும் அவருக்கு எதிராக இல்லை. சாதி சமன்பாடுகள் ஆழமாக இருக்கும் ஒரு மாநிலத்தில், இது மிகப் பெரிய விஷயம்.


அவரது தேர்தல் பிரச்சார முறையும் மிகவும் வித்தியாசமானது. அவர் மக்களைத் தூண்டும் வகையில் பேசுவதில்லை, ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் இல்லை, எதிரிகளை கோபப்படுத்தும் பேச்சுகள் இல்லை. அவரது வழக்கமான பாணியிலேயே, இந்த தேர்தலிலும் அவர் அமைதியாகப் பேசினார். படு எதார்த்தமாக பேசினார். கிராமத்து பெரியவர் பேசும்போது எப்படிப் பேசுவாரோ அப்படி இயல்பாகப் பேசினார். வளர்ச்சி என்பதை அழுத்தம் திருத்தமாக சுட்டிக் காட்டிப் பேசினார். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். 


ஆணித்தரமான பதிலடி




பாஜக மறுபக்கம் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டது.  லாலு மற்றும் தேஜஸ்வியை "காட்டு ராஜ்ஜியம்" (jungle raj) என்று தாக்கியபோதும் கூட நிதீஷ் குமார் அதை தனது பாணியில் நிதானமாகவே கையாண்டார். "அவர்கள் குடும்ப அரசியலைச் செய்தார்கள், பீகாருக்கு எதுவும் செய்யவில்லை, தங்கள் குடும்பத்தைத் தவிர" என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார். அதுவே எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி விட்டது. அந்த அளவுக்கு நிதானமான போக்கில் ஈடுபட்டிருந்தார் நிதீஷ் குமார். 


நிதீஷ் குமார் தனது முறையான தேர்தல் பிரச்சாரத்தை அக்டோபர் 21 அன்று முசாஃபர்பூரில் உள்ள மினாப்பூரில் தொடங்கினார். நவம்பர் 9 வரை, அவர் 184 பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். அக்டோபர் 29 அன்று, சாலை வழியாக தனது சொந்த மாவட்டமான நாளந்தாவில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். இது, அவரது உடல்நிலை சரியில்லை என்றும், இனி மாநிலத்தை வழிநடத்த முடியாது என்றும் எதிர்க்கட்சிகள் கூறிய வாதங்களுக்கு பதிலடியாக அமைந்தது. 


ஆக மொத்தத்தில் நிதீஷ் குமார் பீகார் அரசியலுக்கு மட்டுமல்ல, தேசிய அளவில் பல கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளார்.