நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
பாட்னா: பீகார் தேர்தலை நிதீஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள நிலையில், நிச்சயம் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார். அதை பாஜக தீர்மானித்து விட்டதாக அந்த மாநில காங்கிரஸ் கூறியுள்ளது.
பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார் தலைமையில் எதிர்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த அரசை யார் வழிநடத்துவார்கள் என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஐக்கிய ஜனதாதளம், வெற்றி பெற்றால் நிதீஷ் குமாரே முதலமைச்சராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியோ, "நிதீஷ் ஆக மாட்டார், அதை அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டார் என்று குண்டு வீசியுள்ளது.
முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) செய்தித் தொடர்பாளர் சித்ரஞ்சன் ககன் கூறுகையில், முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உட்பட 71 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் 1,698 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியா கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அவர்களின் வேட்பாளர்கள் கவனமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். பச்வாரா, கஹல்கான், லால் கஞ்ச், கௌரா பௌரம், தாராப்பூர், வைஷாலி, ராஜபாகர் மற்றும் ரோசெரா ஆகிய எட்டு தொகுதிகளில், வேட்புமனு திரும்பப் பெறப்படாவிட்டால், கூட்டணிக் கட்சிகளிடையே நட்பு ரீதியான போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் திங்கட்கிழமை ஆகும்.