சென்சார் பிரச்சனை பண்ற அளவுக்கு ஜனநாயகன்ல ஒன்னும் இல்ல: சீமான்
ஈரோடு: சென்சார் பிரச்சனை பண்ற அளவுக்கு ஜனநாயகன் படத்துல ஒன்னும் இல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை. ஜனநாயகனுக்கு ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விடலாம். அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்தேன் நெருக்கடி தரும் அளவிற்கு ஒன்றும் இல்லை. விஜய்யின் மற்ற படங்களுக்கு எல்லாம் இவ்வளவு சிக்கல் இல்லை. தற்போது தான் சிக்கல் அதிகமாக உள்ளது.
மத ரீதியாக இருப்பது தான் பிரச்சனை என்றால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு சான்றிதழ் கொடுக்கலாமே. சான்றிதழ் கொடுக்கவே இவ்வளவு கால தாமதம் ஆவது சரியில்லை. மதரீதியாக ஒரு கட்சி வருவதற்காக இவ்வளவு பேசும் நீங்கள், ஒரு கோவிலில் விளக்கு ஏற்றுவதை வைத்துக்கொண்டு இவ்வளவு பிரச்சனை செய்கிறீர்கள். யாரையும் புண்படுத்தக்கூடாது என்று நினைக்கிறீர்கள் என்றால், நீங்க அங்குட்டு கெடா வெட்டிக்கோங்க, நாங்க இங்கிட்டு விளக்கு எற்றிக்கிறோம் என்று சொல்லிட்டு போக வேண்டியது தானே. அதற்கு எதற்கு இவ்வளவு பிரச்சனை செய்கிறீர்கள்.
அப்படியே ஏதாவது காட்சி வருது என்றால் அதை நீங்குங்க என்று சொல்லி இருக்க வேண்டும். அதை விடுத்து சான்றிதழே தராமல் இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்ததால் தான் இவ்வளவு பிரச்சனையுமா?. இது எல்லாம் தேவையற்ற நெருக்கடிகள் என்று தானே பார்க்கிறவர்களுக்கு தோணும். எங்களுக்கு எல்லாம் ஒரே கனவு தான். இந்த திராவிட ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பது தான். அரசியல் சக்தியாக உருவாக வேண்டும் என்று தானே தம்பி கட்சி உருவாக்கி இருக்கிறார். அதில் என்ன இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.