அனிருத் இல்லாமல் இனி இயக்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

Su.tha Arivalagan
Sep 03, 2025,10:55 AM IST

இனிமேல் அனிருத் இல்லாமல் படம் இயக்க மாட்டேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 'கைதி 2' படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இது வருத்தத்தை அளித்துள்ளது.


கோயம்புத்தூரில் நடைபெற்ற SSVM Transforming India Conclave 2025 நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், "இனிமேல் அனிருத் இல்லாமல் படம் செய்ய மாட்டேன். ஒருவேளை அனிருத் இந்த வேலையை விட்டால், வேறு ஒருவரைப் பற்றி யோசிக்கலாம்" என்று கூறியிருந்தார். இந்தத் தகவல், 'கைதி 2' படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 'கைதி' படத்தின் பின்னணி இசை மிகவும் பாராட்டப்பட்டதால், அதன் இரண்டாம் பாகத்திற்கும் சாம் சி.எஸ். இசையமைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.




லோகேஷின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு ரசிகர், "'மாஸ்டர்' படத்துக்கு அனிருத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்துதான் இந்த சிக்கல் தொடங்கியது" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "நான் அனிருத் ரசிகன்தான், ஆனால் 'கைதி 2' படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது" எனக் கூறியுள்ளார்.


மேலும், "இது லோகேஷுக்குத்தான் நஷ்டம். வேறு இசையமைப்பாளர் இருந்தால் முதல் பாகத்தின் அனுபவம் கிடைக்காது. படமும் சிறப்பாக இருக்காது," என்றும், "சாம் சி.எஸ். இல்லையென்றால் 'கைதி 2' தோல்வியடையும்" என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


சில மாதங்களுக்கு முன்பு சாம் சி.எஸ். அளித்த ஒரு பேட்டியில், "'கைதி 2' படத்திற்கு இணைந்து பணியாற்றலாம் என லோகேஷ் கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். நாளை அவர் தனது முடிவை மாற்றினால், மற்றவர்கள் சிறப்பாகச் செய்வார்கள் என நம்புகிறேன்" என்று கூறியிருந்தார். இது லோகேஷின் தற்போதைய முடிவை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.


லோகேஷ் கனகராஜின் LCU (Lokesh Cinematic Universe) வரிசையில், 'கைதி' (2019), 'விக்ரம்' (2022), மற்றும் 'லியோ' (2023) ஆகிய படங்கள் அடங்கும். இந்த வரிசையில் அடுத்து வரும் படங்களுக்கு இசை மிக முக்கியமானது. 'கைதி' படத்துக்கு சாம் சி.எஸ். ஒரு தனித்துவமான பின்னணி இசையை வழங்கினார், அது படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. உண்மையில் இசையும் அந்தப் படத்தில் ஒரு ஹீரோவாக ஜொலித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


லோகேஷ் கனகராஜ் சமீபத்தில்தான் ரஜினிகாந்த் நடித்தி கூலி படத்தைக் கொடுத்தார். அடுத்தடுத்து நிறைய படங்களை அவர் திட்டமிட்டுள்ளார். லோகேஷும் அனிருத்தும் இணைந்து தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதால் இந்தக் கூட்டணி மேலும் வலுவாகியுள்ளது.


இருப்பினும், 'கைதி 2'க்கு சாம் சி.எஸ்.ஸின் இசை வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு தொடர்கிறது. லோகேஷ் கனகராஜின் இந்த முடிவு படத்துக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.