இனி இல்லை மன அழுத்தம்!
- முனைவர் ராணி சக்கரவர்த்தி
மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் என்பது வள்ளுவர் வாக்கு. வள்ளுவரின் காலந் தொட்டே மனநலம் பற்றிய சிந்தனை எழுந்துள்ளது. மனதில் உருவாகும் எண்ணங்கள், அதனால் விளையும் செயல்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகியவற்றின் தொகுப்பே, மனநலத்துக்கு அடித்தளமாகத் திகழ்கிறது. அதனால் தான் இன்றைக்கு எல்லோருக்கும் என்ன இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் மன அழுத்தம் இருக்கும். மன அழுத்தம் இல்லாத வாழ்வைக் கற்பனை செய்து பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்குத் தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் ஆபத்து.
நம் சமுகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரமளித்தல், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றில் ஆண்களோடு பெண்ணை ஒப்பிட்டுப் பார்க்கும் நிலை உள்ளது. பெண்கள் இன்றைக்குக் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் ஆணுக்கு நிகராக அல்லது ஆண் பணியாற்றும் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் நிலையை எட்டியுள்ளனர், இந்த ஆண் - பெண் ஒப்பீடு நமது சமுதாயத்தில் பரவலாகப் பார்க்கப்பட்டாலும், பெண்ணின் மனநலம் சார்ந்த பிரச்சனைகள், ஆண்களின் மனநலப் பிரச்சனைகளில் இருந்து வேறுபட்டே பார்க்கப்படுகிறது. ஆண்களை விட பெண்கள் அதிக மன நோய்க்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம், மன எழுச்சி போன்ற மிதமான மன நோய்களும், மனச்சிதைவு போன்ற தீவிரமான மன நோய்களும் அதிகமாகப் பெண்களைப் பாதிக்கிறது.
ஆணின் மனநலப் பிரச்சினைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சிகிச்சைக்குரியதாகவும் கருதப்படும் அதே நேரத்தில், பெண்ணின் மனநலப் பிரச்சனைகள், அவளின் தனிப்பட்ட பிரச்சினையாகவும், குணாதிசயமாகவும், நாடகத் தனமாகவும் பார்க்கப்படுவது, நமது சமூகத்தில் அதிகமாக உள்ளது. நமது குடும்ப அமைப்பு முறை, கலாச்சாரக் கட்டமைப்புகள், பெண்மையைப் பற்றியதான பார்வை போன்ற காரணிகள், பெண்களின் மனநலம் பாதிக்கக் காரணமாக அமைகிறது. பெண்களும், தங்களின் மன நிலை பற்றி சரியான புரிதலும், மனநலம் காப்பதின் முக்கியத்துவம் அறியாமல் இருக்கிறார்கள். இது அவர்களின் மனநலம் சார்ந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
பெண்களைப் பாதிக்கும் மனநல பிரச்சனைகள்
மனச்சோர்வு, மனப்பதட்டம், மன அழுத்தம், மன எழுச்சி, மன சிதைவு போன்ற பொதுவான மனநலப் பிரச்சனைகள் பெண்களை அதிகம் பாதிக்கிறது. பொதுவாக ஒவ்வொரு பெண்ணும், தனது வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று முறையாவது மனநல பாதிப்புக்கு ஆளாகிறார்.
காரணங்கள்
உடலில் காரணங்கள்
மாதவிடாய்க்கு முன் பல பெண்களுக்கு மனநிலையில் ஓர் மாற்றம் தென்படலாம். இதை Disphoric syndrome என்பார்கள். அதேபோல், மாதவிடாய் நிற்கும் பருவத்திலும் (Pre menopause depression) எரிச்சல், கோபம், வெறித்தனம், அதிகாரம் செலுத்துதல் போன்ற மனநலப் பாதிப்புகள், பெண்களிடம் பொதுவாகக் காணப்படும். பிரசவத்திற்குப் பின் உடனடியாகச் சில நாட்களில் மனநிலை மாற்றம் வருவதை postportam syndrome எனக் கூறுவார்கள். கருக்கலைப்பு, கர்ப்பப்பை அகற்றுதல், கற்பழிப்பு, மணமுறிவு போன்றவற்றாலும் பெண்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது.
சமூக ரீதியான காரணங்கள்
(1) அதிக வேலைப்பளு பெண்களை மனச்சோர்வுக்கு ஆளாக்குகிறது. பெண்களிடையே கல்வியும், வேலைவாய்ப்பும் அதிகரித்து உள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வது கணிசமாக உயர்ந்து, குடும்ப வருமானத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.அதே சமயம், ஆண்கள் குடம்ப வேலைகளை பங்கிட்டுக் கொள்வது மிக மிகக் குறைவாக உள்ளது. அதனால் அனைத்து சுமைகளும் பெண்களின் தலையில ஏற்றப்படுகிறது.
(2) பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் உணவிற்கும் உடல் நலத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை தன் உடலுக்கும், உணவிற்கும் கொடுப்பதில்லை. பெண்கள் தங்களுடைய உடல் உபாதைகளுக்கும், நோய்களுக்கும் நேரம் மற்றும் பணம் செலவழிப்பதை முக்கியமான ஒன்றாகக் கருதுவதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு ரத்த சோகை இருப்பது நம் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பரிசோதனை மூலம் அதிகமாக் பார்க்க முடிகிறது. இதனால் ஏற்படும் உடல் சோர்வு, மனச்சோர்வை உண்டு பண்ணுகிறது.
(3) அன்றாட குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் பெண்ணை மனச்சோர்வுக்கு ஆளாக்குகிறது. கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள், மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள், குழந்தை பேறு இல்லாமை, குழந்தைகளால் ஏற்படும் மன உளைச்சல், உறவுச் சிக்கல்கள் போன்றவை பெண்களின் மனநலத்திற்குக் கோடாரியாக அமைகிறது.
வன்முறை பாகுபாடு
குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அடக்குமுறைகள், அவர்களின் மனநலத்தை முழுவதுமாக சிதைத்து விடுகிறது. அதிக பயம், பதட்டம், தாழ்வு மனப்பான்மை போன்றவைகளை பெண்களின் மனதில் விதைத்து விடுகிறது. குடும்பங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் இன்று வரை நிலவும் ஆண், பெண் பாகுபாடு, உரிமை மீறல்கள், விமர்சனங்கள் பெண்ணை மனச்சோர்வுக்கு இட்டுச் செல்கிறது.
சுயம் தொலைத்து போதல்
பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தன் சுயத்தை தொலைத்து விடுகிறார்கள். தன் தேவைகளை மறந்து, குடும்பத்திற்கான தியாக வாழ்வு வாழ்பவள் தான் நல்ல பெண் என்ற கற்பிதம் சமுதாயத்தில் பரவலாக உள்ளது. எனவே பெண்கள் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கனவுகள், ஆசைகள், திறன்கள், பொழுது போக்குகள் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். இதை ஒருநாள் உணரும் போது, தன் சுயம் தொலைத்து போனதை அறியும்போது, மனம் வெடித்துச் சிதறுகிறது. குடும்பத்தினர் மீதும், தன் மீதும் வெறுப்பு வருகிறது. சுயமதிப்பீடு குறைந்து தாழ்வு மனப்பான்மையின் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.
அதிக எதிர்பார்ப்புகள்
குடும்பத்தினர் அனைவரின் அனைத்து தேவைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் பெண்கள், தன் தேவைகளை ஆசைகளை, வலிகளை தன் குடும்பத்தினர் உணர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். பல குடும்பங்களில், அவர்களுக்குக் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே. மதிப்பிழந்து, முக்கியத்துவம் இழந்து அவர்கள் நிற்கும் போது, மனநலப் பிரச்சினைகள் அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. கடன் பிரச்சனைகள், சில கூடா நட்புகள், கணவனின் தீய பழக்க வழக்கங்கள், அதனால் தனக்கு ஏற்படும் பிரச்சனைகள், நம்பிக்கைத் துரோகங்கள் போன்றவை பெண்ணை மேலும் மனச் சோர்வுக்கு ஆளாக்குகிறது.
அறிகுறிகள்
காரணம் இல்லாமல் சோகமாக இருத்தல், அடிக்கடி அழுவது, கோவப்படுவது, எதிலும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருத்தல், பசியின்மை, தூக்கமின்மை, நம்பிக்கை இழப்பு, தற்கொலை எண்ணங்கள், குடும்பத்தினரிடமிருந்து, சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி இருத்தல் போன்றவை சில நாட்களுக்கு சில மாதங்களுக்கு தொடர்ந்து இருந்தால், அவை மன நோய்க்கான எரிச்சரிக்கை மணி என குடும்பத்தினர் உணர வேண்டும்.
மனநல காப்போம்:
சுய பராமரிப்பு
உணவில், உடல் நலத்தில் அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்ளும் பெண்களாகிய நாம், நம் உணவிற்கும், உடல் நலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நமக்கு் பிடித்த உணவை நமக்காகச் சமைப்பது, சத்தான உணவு எடுத்துக் கொள்வது மிக அவசியம். சரியான நேரத்திற்குச் சாப்பிடுவது, பழச்சாறு, வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு பழச்சாறு பருகுவது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் சி மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்டி சோல் ஹார்மோனைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு
வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் தனக்கெனச் சிறிது நேரம் ஒதுக்கி, தன் மனதுக்கு பிடித்த விஷயத்தைச் செய்வது மிகவும் அவசியம். அது பாட்டு கேட்பதாக இருக்கலாம், புத்தகம் வாசிப்பதாக இருக்கலாம், மாலை நேர நடப்பயிற்சியாக கூட இருக்கலாம், பூத்தொடுப்பதாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அதை ரசித்துச் செய்ய வேண்டும். தோழிகளை சந்தித்து பேசி மகிழ்வது, பிடித்த இடங்களுக்குச் சென்று வருவது, புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வது போன்றவை நமக்குச் சந்தோஷ உணர்வைத் தருவதோடு, மனநல பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
நேர்மறையான எண்ணங்கள்
பிரச்சனைகள் இல்லா மனிதனும் இல்லை, தீர்வுகள் எல்லா பிரச்சனைகளும் இல்லை. எனவே பிரச்சினைகளைக் கண்டு துவண்டு விடாமல், தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். நமது வாழ்வில் நிகழும் சின்னச் சின்னச் சந்தோஷத் தருணங்களை ரசித்து வாழப் பழக வேண்டும். என்னால் எதையும் சரி செய்ய இயலாது, எனக்கு மட்டுமே இப்படி நடக்கிறது, நான் துரதிஷ்ட சாலி என்ற எதிர்மறையான எண்ணங்களை களைத்தெறிந்து, என்னால் முடியும், எல்லாம் ஒரு நாள் மாறும் என்ற நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனம் விட்டு பேச, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, நல்ல தோழமையை வைத்துக்கொ ள்ள வேண்டும். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பெண்களின் மனநலத்திற்கு மிகவும் பொருந்தும். தியாகமும், பொறுமையும் மட்டும் பெண்ணின் குணாதிசயமாக இல்லாமல், தைரியமும் தன்னம்பிக்கையும் பெண்ணின் குணமாக மாறும் போது, பெண்ணின் மனநலம் பாதுகாக்கப்படுவது நிச்சயம்.
சம உரிமையோடும், முற்போக்குச் சிந்தனையோடும், பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். சுயமரியாதை, மனவலிமை, நேர்மறை எண்ணங்கள், கல்வி அறிவு, பகுத்துணரும் பண்பு ஆகியவற்றை பெண்கள் அணிகலன்களாகக் கொண்டிருந்தால் பெண்ணின் மனநலம் பாதுகாக்கப்படும். வாழ்க்கை இன்பமாகும்.
மனநலம் காக்க
* உங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்
* உங்களின் உணவு, உடல் நலம், மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
* ஏதாவது ஒரு பொழுதுபோக்கை வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்களின் கூட்டை விட்டு வெளியே வாருங்கள்.
* ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ள ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.
* ஒரு நாளில் ஏதாவது ஒரு செயலையாவது அனுபவித்து செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.
* நேர்மறையான எண்ணத்தோடு, நேர்மையான அணுகு முறையையும் கையாளுங்கள்.
* உங்களது உணர்வுகளை, பிரச்சனைகளை நம்பிக்கை யானவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
* இருப்பதில் நிறைவு காணுங்கள்.
* உங்களுக்காகவும் வாழ பழகிக் கொள்ளுங்கள்
இப்படி இருந்தால் மனநோய் பெண்களைத் தீண்டாது. வாழ்க்கை வாழ்வதற்கே, அதை அனுபவித்து வாழ முயற்சிகள் மேற்கொள்வோம்.
கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.