தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்
Feb 11, 2026,05:13 PM IST
சென்னை: தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அது நடக்கும் போது கண்டிப்பாக தெரிவிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்க உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை என்றும், தற்போது டெல்லியில் உள்ள பாஜக தலைமை தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தேமுதிக உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அப்படி நடக்கும்போது நான் உங்களுக்கு சொல்கிறேன். அனைத்துத் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. அது அவருடைய கருத்து.