நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்
டெல்லி: நிமிஷா ப்ரியா செய்தது மிகப் பெரிய தவறு. அவருக்கு மன்னிப்பு கிடையாது என்று நிமிஷா பிரியாவால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஏமன் நாட்டவரான தலாஸ் அப்தோ மெஹ்தியின் சகோதரர் அப்தெல்ஃபத்தா மெஹ்தி கூறியுள்ளார். மேலும் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஊடகங்கள் ஒரு குற்றவாளியை பாதிக்கப்பட்டவர் போல சித்தரிக்கும் விதத்தில் விஷயங்களைத் திரித்து கூறுவது குறித்து தனது குடும்பத்தினரின் ஆழ்ந்த அதிருப்தியையும் அப்தெல்ஃபத்தா வெளிப்படுத்தியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவரான நர்ஸ் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை புதன்கிழமை நிறைவேற்றப்படவிருந்தது. ஆனால், இந்தியாவின் கிராண்ட் முப்தி என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் தலையீடு மற்றும் கோரிக்கையின் பேரில் தற்காலிகமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் முழு ஆதரவுடன், சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட ஏஜென்சிகள், மற்றும் யேமனின் ஷுரா கவுன்சிலில் உள்ள ஒரு நண்பரை அணுகி மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாகவே தற்போதைக்கு நிமிஷா பிரியாவின் உயிர் தப்பியுள்ளது.
நிமிஷா பிரியா தற்போது ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு தனது முன்னாள் வணிகப் பங்குதாரர் மெஹ்தியை கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, கேரளாவில் உள்ள அரசியல் தலைவர்கள் மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரிடம் அவசர தலையீட்டிற்காக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரியா 2008 இல் ஏமனுக்கு குடிபெயர்ந்து, ஆரம்பத்தில் செவிலியராகப் பணியாற்றினார். பின்னர் தனது சொந்த கிளினிக்கைத் திறந்தார். 2017 இல், அவரது வணிகப் பங்குதாரரான மெஹ்தியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அவரால் கைப்பற்றப்பட்ட தனது பாஸ்போர்ட்டை மீட்டெடுக்க அவருக்கு மயக்க மருந்துகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த மயக்க மருந்துகளால் மெஹ்தி உயிரிழந்தார். இதையடுத்து நாட்டை விட்டு தப்ப முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் அவருக்கு 2020 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2023ல் இந்த தண்டனையானது, ஏமனின் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.