டெல்லியா நீங்க.. வச்சிருக்கிறது பழைய வண்டியா.. அப்படீன்னா உங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது!

Su.tha Arivalagan
Jul 01, 2025,10:33 AM IST

டெல்லி: டெல்லியில் இன்று முதல் எரிபொருள் நிலையங்களில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்ற அறிவிப்புப் பலகைகளைக் கண்டால் ஆச்சரியப்பட வேண்டாம். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், டெல்லி அரசு பயன்பாட்டுக்காலம் முடிந்த அல்லது காலாவதியான வாகனங்களுக்கு, அதாவது 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பழைய பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பழைய டீசல் வாகனங்களுக்கும் எரிபொருள் தடையை அமல்படுத்தியுள்ளது.


இன்று முதல் அந்தத் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களிலேயே மிகவும் மோசமான முறையில் காற்று மாசு இருப்பது டெல்லியில்தான். அந்த அளவுக்கு காற்று மாசு டெல்லியை உலுக்கி எடுத்து வருகிறது. குறிப்பாக குளிர்காலங்களில் டெல்லி கடும் அவதிப்படுவதை தொடர் கதையாக பார்த்து வருகிறோம்.


நவம்பர் 2024 இல் வெளியிடப்பட்ட அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) பகுப்பாய்வின்படி, தேசிய தலைநகரான டெல்லியில் வாகனங்கள் மூலம் ஏற்படும் காற்று மாசுதான் பிரதானமாக இருக்கிறது.




இதைக் கருத்தில்கொண்டு, காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) சட்டம் எண் 89-ஐ வெளியிட்டுள்ளது. இது தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) முழுவதும் அனைத்து வகையான (சரக்கு வாகனங்கள், வணிக வாகனங்கள், பழங்கால வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள்) பழைய வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த உதவுகிறது.


டெல்லியில் மட்டும் சுமார் 62 லட்சம் வாகனங்கள் (61,14,728) பழைய அல்லது காலாவதி வண்டிகளாகும். ஹரியானாவில் 27.5 லட்சம் (மார்ச் 2025 நிலவரப்படி), உத்தரப் பிரதேசத்தில் 12.69 லட்சம் மற்றும் ராஜஸ்தானில் 6.2 லட்சம் காலாவதியான வாகனங்கள் உள்ளன.


அதிக எண்ணிக்கையிலான பழைய வாகனங்கள் வரும் எரிபொருள் நிலையங்களில் டெல்லி போலீஸ், போக்குவரத்து போலீஸ் மற்றும் டெல்லி மாநகராட்சி (MCD) ஊழியர்களை ஈடுபடுத்தும் ஒரு திட்டத்தை போக்குவரத்துத்துறை வகுத்துள்ளது.


டெல்லி போலீஸ் அதிகாரிகள் 1 முதல் 100 வரையிலான எரிபொருள் நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள். அதே நேரத்தில் போக்குவரத்துத் துறை 101 முதல் 159 வரையிலான எரிபொருள் நிலையங்களில் 59 பிரத்தியேக குழுக்களை நியமிக்கும்.


அடையாளம் காணப்பட்ட 350 பெட்ரோல் பம்புகள் ஒவ்வொன்றிலும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி, பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதைத் தடுக்கவும் கண்காணிக்கவும் நிறுத்தப்படுவார். அமலாக்க நடவடிக்கையின் போது சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஒவ்வொரு பெட்ரோல் பம்பிலும் இரண்டு கூடுதல் போலீஸ் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.


பழைய வாகனங்கள் தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார (ANPR) கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்படும். இந்த கேமராக்கள் 498 எரிபொருள் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளன. VAHAN தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கேமராக்கள், நம்பர் பிளேட்டுகளைச் சரிபார்த்து, எரிபொருள் நிலைய ஆபரேட்டருக்கு எச்சரிக்கை செய்யும். இந்த வாகன விவரங்கள் அமலாக்க முகமைகளுடன் பகிரப்பட்டு, பழைய வாகனங்களை பறிமுதல் செய்யவும், அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஆனால் இந்தத் திட்டத்தை திடீரென அமல்படுத்துவது நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றை ஏற்படுத்தும் என்று வாகன உரிமையாளர்களும், விற்பனையாளர்களும் கருதுகின்றனர். பல பழைய வாகனங்கள் சரியாக பராமரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் இருக்கும். அந்த வாகனங்களையும் தண்டிப்பது சரியாக இருக்காதே என்று பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.