நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
சென்னை: மலக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக புயல் உருவாகாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை, மன்னார்வளைகுடா, குமரி கடல் பகுதியில் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த நிலை படிப்படியாக வலுப்பெற்று வந்தது. இது இன்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, சில மணி நேரங்களில் மேலும் வலுப்பெற்று இது மேலும் தீவிரமடைந்தது.
இதன்காரணமாக, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று வரை கனமழை பதிவாகியது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள், நீர்நிலைகள் நிரம்பின. ஆனால் இன்று காலை முதல் படிப்படியாக மழையின் அளவு தென் மாவட்டங்களில் குறைந்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், அடுத்து புயல் சின்னமாக வலுப்பெறும் என்றும் நேற்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இது புயலாக உருவாகாது என்று தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், அந்தமானுக்கு கிழக்கே, மலக்கா ஜலசந்தியில் 2வது காற்றழுத்த நிலை உருவாகியிருந்தது. அது இன்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. மலாக்கா அருகே உருவானாலும், இது அந்தமான் நோக்கி நகராமல் அங்கேயே நீடிக்கிறது. இது அடுத்த ஆறு மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இதனால், இதும் புயலாக மாறாது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகே இருக்கும் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவினாலும், இன்று காலை நிலவரப்படி, இது புயலாக மாறாது, அதுபோல அந்தமானுக்கு கிழக்கே உள்ள தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக உருவாவதற்கான சாதகம் இல்லை. இது கடலிலேயே கரையும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.