2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

Su.tha Arivalagan
Oct 09, 2026,03:18 PM IST

ஆஸ்லோ: 2026-ஆம் ஆண்டிற்கான உயரிய அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞரான நவநீதம் "நவி" பிள்ளைக்கு (Navanethem "Navi" Pillay) அறிவிக்கப்பட்டுள்ளது. 


அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச சட்டத்தை உலகளவில் வலுப்படுத்தவும் இவர் ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டி நார்வே நோபல் குழு இந்த விருதை அறிவித்துள்ளது. 


மனித உரிமைகளுக்காகத் தொடர் போராட்டம் :




தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, தனது வாழ்நாள் முழுவதையும் மனித உரிமைகள், நீதி மற்றும் சர்வதேச சட்டத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணித்தவர். நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றிய இவர், 1973-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க மனித உரிமைத் தலைவர் நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.   


சர்வதேச அரங்கில் முக்கியப் பொறுப்புகள் : 

நோபல் குழுவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. நவநீதம் பிள்ளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதியாகவும், ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் செயலாற்றியுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு உயர் ஆணையராகப் (UN High Commissioner for Human Rights) பொறுப்பு வகித்து, சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.   


நோபல் குழுவின் பாராட்டு :

"உலகில் போர்களும் மோதல்களும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், சர்வதேசச் சட்டங்களைப் பின்பற்றி அமைதியை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. மனித கண்ணியத்தையும் சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளையும் பாதுகாப்பதில் நவி பிள்ளை ஆற்றிய பணி, உலக அளவில் ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது" என்று நோபல் குழு தனது பாராட்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.நெல்சன் மண்டேலாவிற்குச் சட்ட உதவி செய்ததில் தொடங்கி சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உச்சம் வரை உயர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது, மனித உரிமைப் போராட்டங்களுக்கும் சர்வதேச நீதிக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.