வடக்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் சேதம் எனத் தகவல்

Su.tha Arivalagan
Nov 03, 2025,11:37 AM IST

காபூல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், வடக்கு ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரிஃப் அருகே அதிகாலை நேரத்தில் தாக்கியது. 


நிலநடுக்கம் 28 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. மசார்-இ-ஷெரிஃப், பல்க் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது நாட்டின் வடக்குப் பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும். சமங்கான் மாகாண சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் சமிம் ஜோயண்டா, இன்று காலை வரை 150 பேர் காயமடைந்துள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.




இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பெருமளவில் சேதம் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


கடந்த ஆகஸ்ட் மாதம், கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 800 பேர் உயிரிழந்தனர். மேலும் 2,800 பேர் காயமடைந்தனர். திங்கள்கிழமை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள் ஏற்பட்டன. அவற்றில் வலிமையானது 5.2 ரிக்டர் அளவில் பதிவானதாக USGS தெரிவித்துள்ளது. இதேபோல், அக்டோபர் 2023 இல் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மேற்கு ஆப்கானிஸ்தானில் 2,000 க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்தது.