வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

Su.tha Arivalagan
Oct 15, 2026,05:01 PM IST

சென்னை : தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் அக்டோபர் 16 முதல் 19-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


15 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும், 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், மாவட்ட நிர்வாகமும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


நாள் வாரியான மழை முன்னறிவிப்பு விபரம்:




அக்டோபர் 16 (வெள்ளிக்கிழமை):

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


மேலும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அக்டோபர் 17 (சனிக்கிழமை):

சென்னையை சுற்றியுள்ள வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மழை பொழிவு அதிகரிக்கும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அக்டோபர் 18 (ஞாயிற்றுக்கிழமை):

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.


அக்டோபர் 19 (திங்கள்கிழமை):

நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கான வழிகாட்டுதல்கள்:

மழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை: கனமழை பெய்யும் போது இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் திறந்தவெளிகளிலோ, மரங்களின் அடியிலோ அல்லது மின் கம்பங்களுக்கு அருகிலோ நிற்பதைத் தவிர்க்கவும்.


போக்குவரத்து மாற்றம்: தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், மலைப்பாங்கான பகுதிகளுக்குப் பயணம் செய்பவர்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: கடல் பகுதி சீற்றமாக காணப்பட வாய்ப்புள்ளதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை மையத்தின் தொடர் தகவல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அவசர தேவைகள் மற்றும் புகார்களுக்கு பொதுமக்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையை (1077) தொடர்புகொள்ளலாம்.