North East Monsoon season 2025.. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள வச்சு செய்யும் மழை!
தூத்துக்குடி: தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வச்சு செய்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி ஏதும் வரவில்லை. அதற்குள்ளாகவே தூத்துக்குடி, நெல்லையை ஒரு காட்டு காட்டியுள்ளது கன மழை.
இரு மாவட்டங்களிலும் பல பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவில் மழை பெய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் நெல்லை, தூத்துக்குடி நகரங்கள் புயலால் கடுமையான வெள்ளப் பெருக்கை சந்தித்தவை என்பதால் இந்த முறை மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு இப்போதிருந்தே எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசு நிர்வாகமும் அதே கோணத்தில் செயல்பட ஆரம்பித்துள்ளது.
இந்த சீசனில் நெல்லை, தூத்துக்குடி சந்திக்கும் முதல் பெரிய மழை என்பதால் வருகின்ற நாட்கள் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இன்று பிற்பகல் வாக்கில் தூத்துக்குடி, நெல்லையில் பெய்து வரும் மழை படிப்படியாக மட்டுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தூத்துக்குடி, நெல்லையின் உட் பகுதிகளில் மழை மாலை வரை நீடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல கன்னியாகுமரியிலும் மழை களை கட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் கன மழை காரணமாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மழை சீசனில் முதல் முறையாக பள்ளிகளுக்கு விடுமுறை என்ற பெருமையைத் தட்டிச் செல்கின்றனர் இந்த மாவட்டத்து பள்ளிக் குழந்தைகள்!
அப்படியே கேமராவை வடக்கு நோக்கி திருப்பினால்.. மழைக்காலத்தில் அல்லோகல்லப்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலையிலிருந்து லேசான வெயில் அடித்து வருகிறது. இரவில் இங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மெதுவாக இந்த மாவட்டங்களில் மழை சூடு பிடிக்கும்.