தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Meenakshi
Oct 16, 2025,06:14 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வட மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுவும் பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை இன்றுடன் விலகுவதாகவும், இதனையடுத்து இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.




இன்று கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடல்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.