மோகம் தவிர்த்து மோட்சம் செல்ல வழிகாட்டும் நல்ல நாள்.. கொடுத்தும் பெறலாம்... அக்ஷய திரிதியை அன்று!

Su.tha Arivalagan
Apr 30, 2025,11:02 AM IST

- ரேணுகா ராயன்


பொன் வாங்கிட இந்த நாளே சிறந்த நாள், குறைந்தது வெள்ளியாவது வாங்கிட வேண்டும். அன்றைய தினம் அப்படி வாங்கிட பொன் குவியும்....


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பற்ற வைத்தது இன்று மக்களை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்ற நடுத்தர குடும்பத்தினரை பெரிதும் மனதளவில் போராட்டத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. 


ஒரு மூக்குத்தியாவது வாங்கி விட வேண்டும் என்று கருதும் நிலையில் தங்கத்தின் விலையோ உச்சாணியில் நின்று கொண்டு ஆட்டம் காட்டுகிறது. 


அக்ஷய திருதியை பற்றிய உண்மையான எளிமையான தகவல் ஒன்றை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  ஏனெனில் மோகம் தவிர்த்து மோட்சம் செல்ல வழிகாட்டக்கூடிய ஒரு நல்ல நாள் அக்ஷய திருதியை. 




ஆதிசங்கரர் தனது தவ வாழ்வில் தினமும் பிச்சை எடுத்து உணவு அருந்த வேண்டும் என்பதை கடைப்பிடித்து வந்தார் அப்போது ஒரு நாள் பிச்சை எடுக்க ஒரு இல்லத்தின் வெளியே அம்மா என்று அழைத்தார். உள்ளிருந்து வந்த ஒரு பெண்மணி அவரை கண்டதும் அவருக்கு என்ன இடுவது என்று புரியாமல் தனது வறுமையையும் தெரிவிக்க முடியாமல் தத்தளித்தார். சன்னியாச வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒரு சிறு மகன் தனது வாயிலில் நின்று பிச்சை கேட்டு நிற்கும் போது அவள் தாய் உள்ளம் மிகவும் வருந்தியது. வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது அக்குழந்தைக்கு அளிக்க அவளிடம் உண்மையில் ஒன்றுமே இல்லை, ஒரே ஒரு நெல்லிக்கனியை தவிர.


சரி இதையாவது இந்த பிள்ளைக்கு கொடுப்போம் என்று அதை எடுத்து வந்து ஆதிசங்கர பகவானிடம் கொடுத்தார். 


அந்த அம்மையின் நிலையை முழுவதுமாக உணர்ந்து கொண்ட ஆதிசங்கரர் மகாலட்சுமியை மனம் உருகு இறைஞ்சி, கொடுக்கும் உள்ளமும் தாயுணர்வும் நிறைந்திருக்கும் இப்பெண்ணுக்கு இந்த வறுமை தகுமா என்று மன்றாடினார்.


அப்போது கனகதாரா  ஸ்தோத்திரம் என்ற 21 பாடல் தொகுப்பை அன்னை அலை மகளை நோக்கி பாடினார்.  அவர் தனக்கென்று எதையும் வேண்டிக் கொள்ளவில்லை.  நல்ல உள்ளம் கொண்டவரிடம் மகாலட்சுமி நிச்சயம் வசிப்பாள் என்ற பேருமண்மையை இவ்வுலகுக்கு எடுத்துக்காட்ட அன்னையிடம் வேண்டி நின்றார். 


அப்போது தங்க மழை விண்ணில் இருந்து அந்த அம்மையின் இல்லத்தில் பொழிந்தது. அவர்களது வறுமையும் தீர்ந்தது. இது நடந்த நாள் அக்ஷய திருதியை ஆகும். 


அதாவது தனக்கென்று ஏதும் இல்லாத சூழ்நிலையிலும் தானம் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் அதற்கு உலக இச்சை இல்லாத ஒரு மகான் அவருக்காக அன்னையின் அருளை பூமிக்கு அழைத்து வந்ததும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. 


எனவே இந்த நந்நாளில் நம்மால்  இயன்றதை தேவைப்படுவோருக்கு கொடுத்து மகிழும் போது அன்னையின் அருளுக்கும் அன்புக்கும் பாத்திரமாகிறோம்.  அப்போது நமக்கு என்ன தேவையோ அதை அவள் நமக்கு நிச்சயம் கொடுத்து விடுவாள்.


அது தங்கம் தான் என்று இல்லை,  எல்லாமே... எல்லா வளமும் நலமும் அவளே நல்கிவிடுவாள். எட்டு வடிவங்களை கொண்ட அன்னை 16 பேற்றினையும் அருளி நம்மிடம் வாசம் செய்வாள். 


தங்கம் வாங்குவது என்பது நிச்சயம் அவசியமான செயலாக கருத வேண்டிய தேவையில்லை. அன்றைய தினம் வீட்டில் உணவு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கி வைக்கலாம். மாணவச் செல்வங்களுக்கு நோட்டு எழுதுகோல் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். நம்மையும் விட பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு இயன்றதை அளிக்கலாம். 


ஆடையாகவோ பொருளாகவோ அவர்களுக்கு கொடுத்து அவர்களை மகிழ்விக்கும் போது அன்னை உங்களைத் தேடி நிச்சயம் வருவாள் உங்களின் வாழ்வை வளமாக்குவாள். 


வீட்டில் அன்னையின் படத்திற்கு பூ மாலையிட்டு பாயசம் செய்து அவளுக்கு படைத்து நீங்களும் பருகி அனைவருக்கும் வழங்கலாம்.


விவசாயம் செய்வோர் அன்றைய தினம் விதை நெல் வாங்குவதை முக்கியமாக பழங்காலம் தொட்டு கடைபிடித்து வருகின்றனர். இப்போதும் அதைத் தொடரலாம். புதிய தொழில் தொடங்குதல் புதிய விஷயங்களை ஆரம்பிப்பதற்கான நல்ல நாளாக அக்ஷய திருதியை உள்ளது. 


தங்கத்தையும் மிஞ்சியது அன்னையின் பேரருள் அதை இறைஞ்சி நிற்போம் இன்றைய அக்ஷய திருதியை என்ற பொன்னான நாளில்.