அதிமுக, திமுக கொள்கைகளை எடுத்து கொண்டு வந்துள்ளார் விஜய்: சீமான் காட்டம்!
சென்னை: அதிமுக, திமுக கொள்கைகளை எடுத்துக் கொண்டு வந்துள்ளார் விஜய். அவருக்கு என்று எந்த கொள்கையும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல. விளம்பர மாடல் அரசு. சென்னையில் நேற்று அரசு நடத்திய விழா கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை. சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் இருந்தது. கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துகிறீர்கள். பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை. பள்ளி ஆண்டு விழாவில் மாறுவேடம் போடப்படுவது போல நேற்று நாடகம் நடத்தியுள்ளார்.
திமுக, அதிமுக கொள்கைகளை வைத்துக் கொண்டு என்ன மாற்றம் கொண்டு வரப்போகிறார் விஜய். திமுக என்பது ஒரு சனியன், அதிமுக என்பது மற்றொரு சனியன், இரண்டு சனியன்களை சேர்த்து சட்டை தைத்துள்ளார் விஜய். அத்துடன் சனிக்கிழமை சனிக்கிழமை பிரச்சாரத்திற்கு கிளம்பிவிடுகிறார். மாற்றம் என்ற சொல்லையே விஜய் சொல்லவில்லை. இது வரைக்கும் ஒரு பாயிண்டுக்கும் விஜய் வரவில்லை. 2 பாயிண்டு என்று சொல்கிறார். ஒன்று கரூர் மற்றொன்று நாமக்கல் இது தான் அவருடைய பாயிண்ட்.
சாத்தியம் இல்லாத ஒன்றை சாத்தியப்படுத்துவது தான் சாதனை என்று விஜய்யிடம் சொல்லுங்கள். சாதாரணமான மக்கள் அசாதாரணமான ஒன்றிற்கு கனவு காண்பது தான் புரட்சி, அது தான் முயற்சி, அது தான் கனவு. அவருக்கு கற்றுக்கொடுங்கள். அண்ணன் சொல்கிறார் கேட்போம் என்று கேட்க மாட்டேங்கிறார். விமர்சிக்கிறார். மாற்றம் குறித்து அவர் பேசவே இல்லை. நீங்களாக மாற்றம் என்று சொல்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.