பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

Meenakshi
Dec 13, 2025,07:51 PM IST

திருச்சி: மக்களின்  பசி, பட்டினியை போக்காமல் மலைமேல் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். அயோத்தியில் ராமரை வைத்து செய்த அரசியல் எடுபடவில்லை. தற்போது திடீரென முருகன் மீது பாசம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், மக்களின் பசி, பட்டினியை போக்காமல் மலைமேல் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். அயோத்தியில் ராமரை வைத்து செய்த அரசியல் எடுபடவில்லை. திடீரென்று முருகன் மீது பாசம். முருகனும் சிவனும் இந்துக் கடவுளா? சைவக் கடவுளா? தேர்தல் வரும்போது மட்டும் முருகன் மீது பாசம் வருகிறது. கோயிலுக்குள் நடக்கும் ஊழலைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.


அறநிலையத் துறை நேர்மையாக இருக்கிறதா? அருகில் இருக்கும் மலையை வெட்டி கல்குவாரியாக மாற்றுகிறார்கள் இந்த மலையில் மட்டும் தான் முருகன் இருக்கிறாரா? நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு கடவுளை வைத்து மூடி மறைக்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் மூலம் திமுக வலுப்பெறுகிறது. சிறுபான்மை மக்களின் 15 சதவீத ஓட்டு அவர்களுக்கு உறுதியாகிறது.




கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை தொடவுள்ளது. ஒரு கோடி பேருக்கு கொடுத்த நிலையில், கூடுதலாக 36  லட்சம் பேருக்கு கொடுக்கவிருப்பதாகக் கூறுகின்றனர். விடுபட்டவர்களுக்கு கொடுப்பது என்பது 2 மாதங்களில் தேர்தல் இருக்கும் நிலையில் தான் ஞாபகம் வருகிறதா?. பிப்ரவரியில் மடிக்கணிணி கொடுக்கிறார்கள். ஏன் தெரியுமா மார்ச்சில் தேர்தல் வருகிறது.


வாக்கைக் குறிவைத்துத்தான் எல்லாவற்றையும் நகர்த்துகிறார்கள். இதனால் தான் இவர்களை விளம்பர அரசியல் என்கிறோம். 10  லட்சம் கோடியில் நிறைவேற்றப்பட்ட ஏதேனும் ஒரு நலத்திட்டத்தை அரசு சொல்ல வேண்டும். நல்ல கல்வி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், உலகத்தர மருத்துவம் என ஏதேஷம் ஒன்றைச் சொல்ல வேண்டும். தேர்தல் வருவதற்கு முன்னால், ஏன் எங்கள் மீது அக்கறை வருவதில்லை என்று தெரிவித்துள்ளார்.