சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!

Su.tha Arivalagan
Feb 21, 2026,12:43 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பில் முதல் ஆளாக நாம் தமிழர் கட்சி அதிரடியாக தனது 234 வேட்பாளர்களையும் இன்று திருச்சியில் அறிவித்து அறிமுகப்படுத்தவுள்ளது.


நாம் தமிழர் கட்சி 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் எந்தத் தேர்தலிலும் கூட்டணி அமைக்காமல் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வருகிறது. தனித்துப் போட்டியிட்டு பெரும் தோல்விகளைத் தோளில் சுமந்தாலும் கூட தனிப்பெரும் கட்சியாக, இன்று அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக 8+ சதவீத வாக்குகளுடன் கம்பீரமாக நிற்கிறது நாம் தமிழர் கட்சி.


நாம் தமிழர் கட்சி வருகிற 2026 சட்டசபைத் தேர்தலையும் தனித்தே காணவுள்ளது. இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்துகிறது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் களம் காணவுள்ளார். அவர் இதற்கு முன்பு 2016 மற்றும் 2021 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 2016 தேர்தலில் கடலூரில் போட்டியிட்டு 7.24 சதவீத வாக்குகளைப் பெற்ற சீமான், 2021 தேர்தலில் திருவொற்றியூரில் போட்டியிட்டு 24 சதவீத வாக்குகளைப் பெற்றார். இதுவரை எந்தத் தேர்தலிலும் சீமான் உள்ளிட்ட அவரது கட்சி வேட்பாளர்கள் வென்றதில்லை. ஆனால் படிப்படியாக வாக்குகளை கவர்ந்து வருகின்றனர்.




கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய தேர்தலாக அமைந்தது. இந்தத் தேர்தலில் அதிரடியாக 8.22 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி தற்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகவும் உருவெடுத்து வியக்க வைத்துள்ளது.


சீமான் என்ற ஒற்றை மனிதரின் அசராத உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே இதைப் பார்க்க வேண்டும். வருகிற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காணவுள்ளது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது. இன்று திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவுள்ளார் சீமான். 


திருச்சி அருகே உள்ள ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்யவிருக்கிறார். சீமானும் ஒரு வேட்பாளராக களம் இறங்கவுள்ளார். அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மற்ற கட்சிகளைப் போல வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் அறிக்கையை வெளியிடப்போவதில்லை என்று கூறியுள்ள சீமான், அதற்கு மாற்றாக ஆட்சி முறைமை என்ற ஆவணத்தை முன்வைக்க உள்ளார். அதாவது நாம் தமிழர் கட்சியின் ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிக்கையாக இதை அவர் வெளியிடவுள்ளார். 


எங்கள் மாநாடு மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். நாங்கள் எப்படி ஆட்சி செய்யப்போகிறோம் என்ற வழிமுறையை மக்களிடம் விளக்கப் போகிறோம் என்று ஏற்கனவே சீமான் தெரிவித்துள்ளார். 


சீமான் நடத்தப் போகும் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.