பயணிகளின் கோரிக்கையை ஏற்று.. புறநகர் ஏசி ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தெற்கு ரயில்வே!
சென்னை: சென்னை புறநகர் ஏசி ரயில்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 8ஆக அதிகரிக்கப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அத்துடன் வெப்ப அலையும் அதிகமாக வீசுகிறது. இதனால் வேலை நிமித்தமாக வெளியே செல்லக்கூடிய மக்கள் உச்சி வெயிலால் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். குளுமையான பயணத்தை விரும்புகின்றனர். இதனால் ஏசி பஸ், ரயில், கார் போன்ற சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் சென்னை புறநகர் ரயில்களில் ஏசி வசதி இல்லாமல் இருந்தது. ஏசி வசதியுடன் கூடிய ரயில்களை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இதனையடுத்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ஏசி ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஏசி புறநகர் ரயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்துள்ளது. அதன்படி,
ரயில்வே அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு புறநகர் ஏசி சேவைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து மொத்தம் 8 ஏசி ரயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாம்பரத்தில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்படும் ரயில், 7.35க்கு செங்கல்பட்டு செல்லும்.
செங்கல்பட்டிலிருந்து காலை 7.50 புறப்படும் ரயில் மாலை 4.30க்கும், இரவு 8.10 மணிக்கு சென்னை கடற்கரை வரை ஏசி ரயில் இயக்கப்படும். சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.41 மணிக்கு தாம்பரம் வரையிலும், பிற்பகல் 2.30 மற்றும் மாலை 6.17 மணிக்கு செங்கல்பட்டு வரையிலும், தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1 மணிக்கு சென்னை கடற்கரை வரையிலும் ஏசி ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.