அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
- க. சுமதி
கட்டாக்: விதம் விதமான முறையில் திருமணம் செய்வது இப்போது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் ஒடிஷாவைச் சேர்ந்த ஒரு தம்பதி செய்துள்ள திருமணம் அனைவரின் பாராட்டுகளையும், சல்யூட்களையும் வாரிக் குவித்து வருகிறது.
உலகம் முழுவதிலும் பல வித்தியாசமான திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
வெளிநாட்டுக்குப் போய் திருமணம், கப்பலில் திருமணம், விமானத்தில் திருமணம், பாரா சூட்டில் பறந்து கொண்டே கல்யாணம், அது ஏன்.. கடலுக்கடியில் போ் திருமணம்.. ஸ்கேட்டிங் செய்தபடி திருமணம்.. என விதம் விதமாக, டிசைன் டிசைனாக, ரூம் போட்டு யோசித்து நூதன முறையில் திருமணம் செய்வது மக்களிடையே பிரபலமாகி விட்டது. அதிலும் இந்த ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டெல்லாம் இருக்கே.. அடேங்கப்பா.. அதெல்லாம் வேற ரகமாக போய்ட்டிருக்கு.
வெளிநாடுகளில் இருக்கும் இப்படிப்பட்ட வினோத திருமண மோகம் இப்போது இந்தியர்களிடையேயும் வேகமா பரவி வருகிறது. இந்தியாவில் பெரும்பாலும் அவரவர் குடும்ப பழக்க வழக்கங்களின் படி மரபு மரபாக பின்பற்றப்படும் சடங்குகளின் அடிப்படையிலே திருமணங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் தற்போது நிறைய புதுமைகளைப் புகுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், ஒடிசாவில் நடைபெற்ற திருமணம் இவை அனைத்தையும் தாண்டி இந்திய அரசியல் சாசனத்தின் மீது தங்களுக்கான பக்தியை வெளிப்படுத்தும் எனது விதமாக அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் ஒரு காதல் ஜோடி.
ஒடிசாவை சேர்ந்த பிரீத்தி பன்னா மிஸ்ரா (40) மற்றும் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த பானு தேஜா (43). இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் சந்தித்த நிலையில் இருவரிடையே நட்பு மலர்ந்தது. பின்னர் நட்பு ஆழமாகி, காதலாக மாறி தற்போது திருமணம் செய்து கொண்டுனர்.
வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த ப்ரீத்தியும் பானு தேஜாவும் இரு வீட்டு திருமண சடங்குகளைக் கடந்து அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்து கொண்டது அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்துள்ளது. இது இருவரும் நமது நாட்டின் அரசியல் சாசனத்தின் மீது கொண்ட பக்தியையும் தேசபற்றையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
வெவ்வேறு கலாச்சாரம், பண்பாடு, இயல்பு ஆகியவற்றைக் கொண்ட இந்தியாவை அழகாகவும், இறுக்கமாகவும், வலிமையாகவும் ஒருங்கிணைக்கும் சங்கிலிதான் நமது அரசியல் சாசனம். அப்படிப்பட்ட அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்து நடந்துள்ள இந்த திருமணம் உண்மையிலேயே பாராட்டுக்குரியதே.
(க. சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)