தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!

Su.tha Arivalagan
Dec 11, 2025,09:56 AM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


ஊரெங்கும் சுமந்து வருதே துளஸி வாஸம் காற்று

ஊனுருகிக் கரையுதிங்கே அன்பையள்ளி ஊற்று

ஊசிமுனைத் தவமெல்லாம் ஆன்றோரின் கூற்று

ஊதியொலி எழுப்பும் சங்கே அமுதனுக்கே சாற்று.


தொழுதேத்தும் பத்மநாபன்                     

யாதவ குல திலகன் 

மதுசூதனன் மாயன்              

மதுகைடபாதி அரக்கரை மாய்த்த மாதவனே 

மனதிலே நின்ற நீலமேகனாய்  களைவானிடர்


ஆடிப்பூர மங்கையிவள் கோதை

ஆழ்வாரையே மிஞ்சுகின்ற கோதை

அனைவர்க்கும் பாதை

அவள் தந்த திருமொழி போதை


               


வேதம் நான்கிற்கும் இவள் வித்து

வேதமில்லா வைணவர்க்கு சொத்து

விஷ்ணுசித்தர்க்கே இவள் முத்து

வைணவத்திற்கு இவள் வித்து


பாவைப் பாடல் முப்பதுமே கன்னல்

பதிகம் பதிநான்குமே காதல் காதல்

ஆளவைத்த அப்பனையே மயக்கினாள்

அரங்கமதில் நடனமாடிய நங்கையவளே!


வைஷ்ணவஹரி 

வைகுண்டஹரி 

வைமளந்தஹரி 

வையம் காக்கும்ஹரி 

வைகறையில் பணிந்து  

வைத்தியம் பெற்று மகிழவே வைணவஹரி 

வைதேகியின் 

வையாளிஹரி


சுந்தரவரதராஜனே சுந்தரத்தோளனே 

மந்தகாச மாமாணிக்கமே நற்காந்தல் மலரே 

நரநாரணா தாகமெல்லாம் தகர்க்கும் தாமோதரனே 

கருணை வள்ளலே காகுத்தனே 

அடியோங்கள் அக்காரகனியே 

அளித்தருள்வாய் நின்னகனிழலே


கண்ணன் அவன் நீல உடல் சிரிக்கும் 

அவன் சிங்கார வதனம்

கொவ்வை செவ்விதழ்கள் 

முத்து பற்கள் மஞ்சள் 

பட்டாடை மயில்பீலி மகுடம் 

வண்ண வண்ண காட்டு மலர்மாலை 

செந்தாமரைப் பாதங்கள் 

இப்படி வண்ணமயம் 

இவன் மாய தோற்றமதே மயக்கும் இதயமதை


என்றென்றுமே தெய்வமே

கறவைப்பின் செல்பவனே

ஓங்கி உலகளந்தனே

கோகுலம் காத்தவனே

சகடமுத்தவனே

மங்கை மானம் காக்க சேலை மாலமாலத்தந்தவனே 

சங்காழியேந்தியவனே

எவர்க்கும் நானேயென உரைத்த நாரணா பல்லாண்டு பல்லாண்டு


கண்ணன் குழலும் ஓரழகு

கன்னியின் குழலில் பூவழகு

கருத்த நிறமும் தனியழகு

கரிய நீள்விழி அவளழகு 

வானில் தோன்றும் மதியழகு

வாரி அணைக்கும் மெய்யழகு

வாழ்வு நல்கும் அருளழகு

வாஸனைப் பூவைப் போலழகுடா நீலமேகனே


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)