ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
- அ.சீ.லாவண்யா
டெல்லி: ஈரானைச் சுற்றியுள்ள போர் பதற்றம் உலக பொருளாதாரத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க வளைகுடா பகுதியில் இருந்து ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் கப்பல்களின் போக்குவரத்து செலவு சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் காரணமாக கடல் வழித்தடங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதனால் கப்பல் நிறுவனங்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், கப்பல் இயக்கச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள ஆசிய நாடுகளுக்கு இந்த நிலை கவலையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து செலவு அதிகரிப்பது, இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் மொத்த செலவையும் உயர்த்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் செலவு உயர்வு நீடித்தால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை, உற்பத்திச் செலவு மற்றும் பணவீக்கம் போன்றவற்றிலும் மறைமுக தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் மத்திய கிழக்கு நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை மட்டும் உலகை அசைக்காது… அதை ஏற்றிச் செல்லும் கப்பலின் கட்டணமும் உயர்ந்தால், அதன் தாக்கம் நம் வீட்டு வாசல் வரை வந்து சேரும்! ஈரான் போர் பதற்றம் எப்போது தணியும் என்பதுடன், எண்ணெய் விலை எப்போது நிலைபெறும் என்பதும் உலக நாடுகளின் அடுத்த பெரிய கேள்வியாக மாறியுள்ளது.