பழைய ஓய்வூதிய திட்டம்: நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியீடு.. ஜாக்டோ ஜியோ தகவல்!
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை புதிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகளான போட்டா ஜியோ மற்றும் ஜாக்டோ ஜியோ ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையில், கடந்த 22 ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் 2ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்களை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டதாகவும், இதற்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், நாளை முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர்கள் தெரிவித்தனர். முதல்வர் வெளியிடப் போகும் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். அவரது அறிவிப்பைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்போம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.