வரலட்சுமி விரதம் 2025.. லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருப்போம்!

Swarnalakshmi
Aug 07, 2025,06:25 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


வரலட்சுமி விரதம்: லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் நாள் வருகிற ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ஆடி மாதம் 23ஆம் நாள் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.


வரலட்சுமி விரத நாளன்று பௌர்ணமியும் இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகவும் விசேஷமானதாகவும் அமைந்துள்ளது. வரலட்சுமி விரதம் அவரவர் குடும்ப வழக்கத்திற்கும், நிலைமைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப வழிபாடு செய்வதினால் லட்சுமிதேவியின் அருள் கட்டாயம் கிடைக்கும். சிலர் வீடுகளில் கலசம் வைத்து அதில் மாவிலை தேங்காய் வைத்து மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்வார்கள். சிலர் வீட்டில் லட்சுமி தேவியின் உருவப்படம் வைத்து வாசனை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்வார்கள். 




மற்றும் சிலர் லட்சுமி தேவியின் உருவச் சிலை வைத்து மனை மீது அமரச் செய்து அலங்காரம் செய்து வழிபாடு செய்வார்கள். வியாழக்கிழமை அன்று மாலை லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து ,வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வரலட்சுமி பூஜை மேற்கொண்டு, பின்னர் சனிக்கிழமை புனர்பூஜை செய்து வழிபாட்டினை நிறைவு செய்வார்கள். இவ்வாறு மூன்று நாட்கள் பூஜை மேற்கொள்வது சிறப்பு . அவரவர் வேலைப்பளுவுக்கு ஏற்ப பூஜை மேற்கொள்ளலாம்.


வரலட்சுமி விரதத்தை அனைவரும் கடைப்பிடிக்கலாம். திருமணம் ஆன சுமங்கலி பெண்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் நல்ல வரன் அமைவதற்காகவும் , வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் வரலட்சுமி விரத பூஜை செய்து லட்சுமி தேவியின் அருளை பெறுவதற்கான உகந்த நாள்.


பூஜை செய்ய உகந்த நேரம்: ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6:00 மணி முதல் 7 :20 மணி வரை.* ஆகஸ்ட் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 :15 மணி வரை .பின்னர் *காலை 9:00 மணி முதல் 10 :20 மணி வரை *மாலை 6:00 மணிக்கு லட்சுமி பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.


வரலட்சுமி பூஜைக்கு ஏற்ற மலர்களான தாமரை மலர் வைத்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானது. மேலும் வாசனை மலர்களான மல்லி, முல்லை ,மரிக்கொழுந்து, செவ்வரளி, சாமந்தி ஆகிய மலர்கள் வைத்து அலங்காரம் செய்து நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் ,வெல்லம் பொங்கல், வெண்பொங்கல், பால் பாயசம் ,எலுமிச்சை சாதம், சுண்டல் ,சுழியம் ,வடை, அப்பம் ,லட்டு ,அதிரசம் இதில் தங்களால் இயன்றவற்றை சமைத்து படையல் செய்து வழிபடலாம்  .


சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு மஞ்சள் , குங்குமம், ஜாக்கெட் பிட், வளையல் ,தாலி சரடு இவற்றுடன் சேர்ந்து ஏதாவது பரிசு பொருட்கள் கொடுக்கலாம்.


இவ்வாறு வீட்டில் பூஜை  செய்யும் வழக்கம் இல்லாதவர்கள் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபாடு  செய்வது மிகவும் சிறப்பு. தமிழ்நாடு , ஆந்திர பிரதேசம், கர்நாடகாவில் வரலட்சுமி விரத பூஜை மிகவும் பிரசித்தமாக கொண்டாடப்படுகிறது. பூஜை அன்று சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் கால்களுக்கு மஞ்சள் பூசி, அவர்களை ஒரு மனையில் அமர்த்தி ,லட்சுமி தேவிக்கு நைவேத்தியமாக படைத்த பிரசாதத்தை கொடுத்து, அவர்களுக்கு மஞ்சள், குங்குமம்  ,பழம், கண்ணாடி வளையல், தாலிச் சரடு, பூ  புடவை ஜாக்கெட் துணி அல்லது அவர்களால் இயன்ற ஏதாவது ஒரு பரிசு பொருள் கொடுத்து   அவர்களிடமிருந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வார்கள். பூஜையில் மகா லட்சுமி அஷ்டோத்திரம், அஷ்டலட்சுமி அஷ்டோத்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம் ,லலிதா சகஸ்ரநாமம் பாடல்களைப் படித்தும் பாடியும் கொண்டாடி ,வரலட்சுமி பூஜையை செய்வார்கள்.


வரலட்சுமி பூஜை செய்பவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ,நிறை செல்வம், உயர் புகழ் ,மன அமைதி, தைரியம் ,நிம்மதி பெற்று மேலோங்கி வாழ வேண்டும் என்று தென் தமிழ் சார்பாக அனைவருக்கும் வரலட்சுமி விரத பூஜை நல்வாழ்த்துக்கள் . வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.