Short Story: ஊன்றுகோல்!

Su.tha Arivalagan
Jul 23, 2026,02:57 PM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி


பரமசிவம் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதையும் அந்த அரசுப் பள்ளியின் கணக்கு ஆசிரியராகவே கழித்தவர். "பெத்த புள்ளைங்கதான் வயசான காலத்துல நமக்கு ஊன்றுகோல்" என்ற சமூகத்தின் பொதுவான நம்பிக்கையை அவரும் ஆழமாக நம்பியிருந்தார். அதனால் தான், தன் ஒரே மகன் கார்த்திக்கை நகரின் முன்னணி தனியார் பள்ளியிலும், பிறகு சென்னையில் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியிலும் படிக்க வைத்தார். அதற்காகத் தன் பூர்வீக நிலத்தையும் விற்றார்.


"என்ன பிள்ளைவாள், எல்லாத்தையும் வித்து பையனுக்குச் செலவு பண்றீங்க?" என்று கேட்ட நண்பர்களிடம், "என் பையன் படிச்சுப் பெரிய ஆளானா, அவன் கை குடுத்து எங்களைத் தாங்குவான். அது போதும்" என்று பெருமிதமாகச் சொல்வார்.


காலம் உருண்டோடியது. கார்த்திக் படித்து முடித்து, அமெரிக்காவில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். திருமணமும் அங்கேயே முடிந்தது.


ஆரம்பத்தில் மாதமொருமுறை போன் செய்தவன், பிறகு பண்டிகைகளுக்கு மட்டும் பேசினான். பரமசிவம் பிள்ளையின் மனைவி காமாட்சி கடுமையான முடக்குவாதத்தால் படுத்த படுக்கையானபோது, கார்த்திக்கிற்குத் தகவல் போனது.




"அப்பா, அங்கே மெடிக்கல் எக்ஸ்பென்ஸ் அதிகமா இருந்தா சொல்லுங்க, பணம் அனுப்புறேன். என்னால் இப்போ லீவ்ல வர முடியாது. ப்ராஜெக்ட் டெலிவரி இருக்கு," என்றான் கார்த்திக், சுருக்கமாக.


பணம் வந்தது, ஆனால் படுக்கையில் கிடந்த தாய்க்குத் தேவைப்பட்டது மகனின் கரம். அந்த ஏக்கம் தீராமலேயே காமாட்சி ஒரு கார்த்திகை மாத இரவில் கண்ணை மூடினாள். கார்த்திக் காரியம் செய்யக்கூட வரவில்லை. "விசா பிராப்ளம் அப்பா" என்ற ஒற்றை வரியில் தன் கடமையை முடித்துக் கொண்டான்.


பரமசிவம் பிள்ளை தனித்து விடப்பட்டார். முதுமையும், தனிமையும் அவரைச் சூழ்ந்தன. சமையல் செய்யக் கைகள் நடுங்கின. ஊரே அவரைப் பரிதாபமாகப் பார்த்தது. "பெத்த புள்ளை ஊன்றுகோலா இருப்பான்  என்று நம்புனாரே... இப்போ தனியா கிடக்காரே" என்று ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டனர்.


ஒரு நாள், பரமசிவம் பிள்ளை வீட்டின் திண்ணையில் அமர்ந்து கஞ்சி குடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து இறங்கியது அன்பரசு.


அன்பரசு, பரமசிவம் பிள்ளை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளியில் படித்தபோது, வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டிய சூழலில் இருந்த  ஒரு ஒரு விவசாயியின் பையன். அன்று பரமசிவம் பிள்ளை தன் சொந்தப் பணத்தைக் கட்டி, அவனுக்குப் புத்தகங்கள் வாங்கித் தந்து, படிப்பதற்கு உதவினார். 


"ஐயா..." என்று அன்பரசுவின் குரல் கேட்டது. 


பரமசிவம் பிள்ளை நிமிர்ந்து பார்த்தார். "யார்ப்பா நீ?"


"நான் அன்பரசுங்க ஐயா. முப்பது வருஷத்துக்கு முன்னாடி உங்ககிட்ட படிச்சவன். இப்போ டவுன்ல சொந்தமா ஒரு லேத் ஃபேக்டரி வச்சிருக்கேன். அம்மா தவறுன விஷயம் இப்பதான் ஐயா தெரிஞ்சது. நீங்க தனியா இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்..." என்று சொல்லிக்கொண்டே திண்ணையில் ஏறி, அவரிடமிருந்த தட்டை வாங்கி, தானே உணவை ஊட்டிவிடத் தொடங்கினான்.


அன்று முதல் அன்பரசுவின் வழக்கம் மாறியது. தினமும் காலை, மாலை அவனோ அல்லது அவன் மனைவியோ வந்து பரமசிவம் பிள்ளைக்குத் தேவையானவற்றைச் செய்யத் தொடங்கினர்.


ஒரு ஞாயிற்றுக்கிழமை, அன்பரசு தன் கார் கதவைத் திறந்து, "ஐயா, இந்த வீட்டோட தனிமையில நீங்க ஏன் கஷ்டப்படணும்? எங்க வீட்டோட வந்துடுங்க. எனக்கும் ஒரு அப்பாவோட ஆசீர்வாதம் வேணும்" என்றான் உரிமையோடு.


பரமசிவம் பிள்ளை கலங்கிய கண்களுடன் தன் வீட்டைப் பூட்டிவிட்டு, அன்பரசுவின் காரில் ஏறினார்.


வழியில் கார் ஒரு சிக்னலில் நின்றது. அப்போது கார்த்திக்கிடமிருந்து பரமசிவம் பிள்ளையின் மொபைலுக்கு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது.


"அப்பா, நான் வீட்டை விக்கலாம்னு இருக்கேன். அங்கே ரியல் எஸ்டேட் வேல்யூ நல்லா இருக்கு. நீங்க ஏதாவது முதியோர் இல்லத்துல சேர்ந்துடுங்க, அதுக்கான அட்வான்ஸ் பணத்தை நான் ஆன்லைன்ல கட்டிடறேன்" என்றான் கார்த்திக், எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல்.


பரமசிவம் பிள்ளை மெதுவாகப் புன்னகைத்தார்.  ரொம்ப சந்தோஷம் மகனே. அது நீ வாழ்ந்த வீடு .நீ வளர்ந்து விடு .உங்க அம்மாவும் நானும் வாழ்ந்த வீடு. அந்த ஓட்டுதலோ உறவோ உன் மனதில் ஏதுமில்லை. நான் என்ன செய்வேன். உன் இஷ்டப்படி நடந்து கொள்.  நான் என் மகனோட வீட்டுக்கு போகிறேன்" என்றார்.


மறுமுனையில் கார்த்திக் குழப்பத்துடன், "என்னப்பா சொல்றீங்க? நான் தான் அமெரிக்கால இருக்கேனே, அப்புறம் யாரு..." என்று இழுத்தான்.


"இரத்த பந்தமும், பெற்ற பிள்ளையும் மட்டும்தான் ஊன்றுகோல்னு இந்த சமூகம் ஒரு மாயையை உருவாக்கி வச்சிருக்கு கார்த்திக். அந்த நம்பிக்கை எனக்குப் பொய்யாப்போனது உண்மைதான். ஆனால், ஒரு ஆசிரியனா நான் விதைச்ச விதை இன்று ஆலமரமா உயர்ந்து நிக்குது அன்பரசு வடிவில்.


உன் பணமும், உன் கடமை இல்லாத பாசமும் எனக்கு இனித் தேவையில்லை," என்று கூறிவிட்டு போனை வைத்தார்.


கார் அன்பரசுவின் வீட்டை நோக்கி நகர்ந்தது. பரமசிவம் பிள்ளைக்குத் தெரியும், அந்த ஊன்றுகோல் எப்போதோ உடைந்துவிட்டது; ஆனால், இப்போது அவர் ஒரு நிழல் மரத்தின் அடியில் பாதுகாப்பாக இருக்கிறார்.


எதிர் முனையில் கார்த்திக் எதுவுமே புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயதான பின் தன் அப்பாவின் வலி புரியத் தொடங்கும். புரியும் போது அவனின் அப்பா இவ்வுலகில் இருப்பாரா..?


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)