இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!
லாகூர்: இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் எனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இறந்து போய் விட்டனர். நானும் அதில் இறந்திருக்க வேண்டும். ஆனால் தப்பி விட்டேன் என்று கூறியுள்ளார் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அஸார்.
இந்தியாவில் பல்வேறு கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களை நடத்திய அமைப்புதான் இந்த ஜெய்ஷ் இ முகம்மது. இதன் தலைவனாக இருப்பவர்தான் மசூத் அஸார். இந்தியா இன்று அதிகாலையில் நடத்திய அதிரடி தாக்குதலில் பஹவல்பூரில் உள்ள மசூத் அஸாருக்குச் சொந்தமான தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தகர்க்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான மசூதியும் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது.
இந்த நிலையில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக அஸார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜெய்ஷ் இ முகம்மது தலைமையகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 பேர் எனது குடும்பத்தினர். நான்கு பேர் எனது நெருங்கிய கூட்டாளிகள்.
எனது அக்காள், அவரது கணவர், ஒரு உறவினர், அவரது மனைவி, இன்னொரு உறவுக்காரர், உறவினர்களின் ஐந்து குழந்தைகள் என 10 பேரை எனது குடும்பம் பறி கொடுத்துள்ளது. இதில் நானும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அல்லா அந்த பாக்கியத்தை எனக்குத் தரவில்லை என்று கூறியுள்ளார் மசூத் அஸார்.
இந்த தாக்குதலில் பலியானவர்களில் அஸாருக்கு மிகவும் நெருக்கமான ஒரு கூட்டாளி, தனது தாயாருடன் உயிரிழந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.